ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இந்திய அணியை மறுகட்டமைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகிறது. கங்குலி தலைமையேற்ற பிறகு முதல் ஒவ்வொரு சீனியர் வீரர்களும் விலகும்போது அடுத்த தலைமுறையிடம் அணியை ஒப்படைக்க வேண்டியது அவசியமான ஒன்றாக மாறுகிறது.
மறுகட்டமைப்பு:
இந்திய அணி தற்போது அப்படியொரு சூழலில்தான் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்திய அணியில் உள்ள வீரர்களின் திறமையில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், கடைசியாக அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகவே இருந்தது.
அந்த தொடரை மட்டும் வைத்துக்கொண்டு இந்திய அணியை எடைபோட முடியாது என்பதுதான் உண்மை. ஆனால், உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியை மறுகட்டமைக்க வேண்டும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால், கடந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் சீனியர் வீரர்கள் ரோகித், விராட்கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்திக் தலைமையில் இளம் பட்டாளம் களமிறங்கி வருகிறது.
இளம் தலைமுறைக்கு வாய்ப்பு
தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் 33 வயதை கடந்த வீரர்களாக உள்ளனர். கேப்டன் ரோகித்சர்மாவிற்கு 35 வயதும், விராட்கோலிக்கு 35 வயதும், ஜடேஜாவிற்கு 34 வயதும், முகமது ஷமிக்கு 32 வயதும், அஸ்வினுக்கு 36 வயதும், சூர்யகுமார் யாதவிற்கு 32 வயதும் ஆகிறது. இவர்கள் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக உலா வருகின்றனர்.
இவர்களில் சூர்யாவும், ஷமியும் இன்னும் சில ஆண்டுகள் ஆடலாம். மற்ற வீரர்களுக்கு உடல்தகுதி, ஆட்டத்திறனும் இருந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆடலாம். அதேசமயம் அணியின் சமநிலையை கவனத்தில் கொண்டு அடுத்த தலைமுறை வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் இப்போது முதலே இளம்வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
புதிய பட்டாளம் தேவை
ரோகித்சர்மாவிற்கு பிறகு ஹர்திக்பாண்ட்யாவை கேப்டனாக்குவது ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், அவரது தலைமைக்கு வலு சேர்க்க புதிய படையை உருவாக்க வேண்டியது அவசியம் ஆகிறது. ஸ்ரேயாஸ், பும்ரா போன்ற வீரர்கள் அடிக்கடி காயத்தில் சிக்குவதும் கவலை அளிக்கிறது. இப்போது அணியின் அடுத்த கட்ட தயாரிப்பாக சுப்மன்கில், இஷான்கிஷான் தயாராகி வருகின்றனர்.
ஆனால், ஒரு புதிய அணியை கட்டமைக்க இருவரை மட்டும் தயார்படுத்துவது சரியாக அமையாது. இவர்களுடன் இன்னும் சிலரை உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும். குறிப்பாக, வேகப்பந்து வீச்சில் தற்போது காயமின்றி வீசும் வீரராக முகமது சிராஜ் மட்டுமே உள்ளார். பும்ரா மீண்டு வந்தாலும் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை கண்டறிய வேண்டியது அவசியம் ஆகும்.
தோனி போல ஃபினிஷர்
அதேபோல, அக்ஷர்படேல் மட்டுமின்றி ஜடேஜாவைப் போல மற்றொரு ஆல்ரவுண்டரை உருவாக்க வேண்டியதும் அவசியம் ஆகும். கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் நீடித்த தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும், இல்லாவிட்டால் அவர்களுக்கான மாற்று வீரர்களையும் கண்டறிய வேண்டியது அவசியம் ஆகும்.
இவையனைத்திற்கும் மேலாக மிகவும் சவாலான ஒரு விஷயம் இந்திய அணி நிர்வாகத்திற்கு தோனி மாதிரி ஒரு ஃபினிஷரை கண்டுபிடிக்க வேண்டியது ஆகும். இது சாத்தியமற்ற ஒன்றுதான் என்றாலும், கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி உணர்த்தியது, தோனியின் வெற்றிடத்தையே. மொத்தத்தில் உலகக்கோப்பைக்கு பிறகு புதிய இந்திய அணியை கட்டமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.