இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை(17-02-2023) டெல்லியில் நடைபெற உள்ளது.
டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டி நாளை நடக்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானமானது சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. இதில், இந்திய அணி 13 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. 15 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
மைதானம் எப்படி?
அருண் ஜெட்லி மைதானத்தை பொறுத்தவரையில் போட்டி தொடங்கியதும் ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மைதானம் சந்தேகத்திற்கு இடமின்றி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பலாம். இதனால், இரு அணிகளில் உள்ள சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களின் ஆதிக்கத்தை இந்த போட்டியில் நாம் காணலாம்.
இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் சராசரியாக 342 ரன்கள் வரை குவிக்கப்பட்டுள்ளது. நான்காவது இன்னிங்சில் சராசரியாக 165 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த கால போட்டிகளை வைத்து பார்க்கையில் இந்த போட்டியில் முதலில் பேட் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக அணில் கும்ப்ளே உள்ளார்.
இந்த மைதானத்தில் விளாசப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 614 ரன்கள் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி இந்த ரன்களை குவித்துள்ளது. இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோரும் இந்திய அணியால் எடுக்கப்பட்டதே ஆகும். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 75 ரன்களில் இதே மைதானத்தில் சுருண்டுள்ளது.
அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியை ஹாட்ஸ்டார் மட்டுமின்றி தூர்தர்ஷனிலும் கண்டுகளிக்கலாம்.