இந்தியா –நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற தெம்பில் டி20 தொடரில் களமிறங்கியது. ஆனால், ராஞ்சியில் இந்திய அணியின் சொதப்பல் பந்துவீச்சு, பீல்டிங் மற்றும் பேட்டிங் அப்பட்டமாக வெளியே தெரிந்தது.
எதிர்வரும் உலகக்கோப்பை டி20 தொடரை கருத்தில் கொண்டு இப்போது முதல் இந்திய அணியை பட்டைத் தீட்டி வரும் நிலையில், ரோகித், விராட், ஷமி, புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்திய அணியில் ஷிவம் மாவி, அர்ஷ்தீப், உம்ரான் மாலிக், ஜிதேஷ், பிரித்வி ஷா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் என ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த போட்டியில் இந்திய அணி சீராக தொடங்கினாலும் கடைசி ஓவரில் அர்ஷ்தீப்சிங் 27 ரன்களை வாரி வழங்கியது இந்திய அணிக்கே கடுப்பேற்றியது என்றே கூறலாம். தொடர்ந்து 177 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியை சான்ட்னர், ப்ராஸ்வெல் முடக்கினர். சூர்யகுமார் யாதவ் வழக்கமான அதிரடியாக ஆட முடியாவிட்டாலும் 47 ரன்களை எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் அபாரமாக ஆடி இந்தியா கவுரவமான ஸ்கோர் எட்ட உதவினார்.
இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், தொடரில் நீடிக்க வேண்டுமா? அல்லது தொடரை இழப்பதா? என்று இந்திய அணி தீர்மானிக்கும் போட்டி நாளை லக்னோவில் நடக்கிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முழு மன வலிமையுடன் களமிறங்கும், மிட்செல், கான்வே பேட்டிங் பலமாக உள்ளனர். ஆலன், ப்ராஸ்வெல், சாப்மன், பிலிப்ஸ் அதிரடி காட்டினால் இந்திய அணிக்கு நிச்சயம் நெருக்கடிதான்.
இந்திய அணி பேட்டிங்கை காட்டிலும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டாலே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்த்து ரசியுங்கள்.
ALSO READ | அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கமா..? என்ன காரணம்..? பரபரக்கும் கோலிவுட்