2023ம் ஆண்டை இந்திய கிரிக்கெட் அணி அற்புதமாக தொடங்கியுள்ளது என்றே கூறலாம். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. குறிப்பாக, ரோகித் – விராட்கோலி இருவரின் அசத்தல் பேட்டிங் இந்திய வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், 2023ம் ஆண்டின் முதல் டி20 போட்டியில் இந்தியா இன்று விளையாடுகிறது. ரோகித், விராட்கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக்பாண்ட்யா தலைமையில் இளம் பட்டாளங்கள் இந்த போட்டியில் களமிறங்குகின்றனர்.
டி20 போட்டி என்பதால் இரு அணிகளும் பட்டாசாய் வெடிக்க முயற்சிப்பார்கள். தோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் இந்தியா – நியூசிலாந்து போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய அணியில் சுப்மன்கில், இஷான்கிஷான், திரிபாதி, சூர்யகுமார் யாதவ், தீபக்ஹூடா பேட்டிங்கில் அசத்த காத்துள்ளனர். குறிப்பாக, சுப்மன்கில் பேட்டிங் மிகப்பெரிய பலமாக உள்ளது.
பந்துவீச்சில் உம்ரான்மாலிக், ஷிவம் மாவி ஆகியோருடன் ஹர்திக்கும் வேகத்தில் அசத்துவார். சுழலில் குல்தீப், சாஹல் அசத்துவார்கள். கேப்டன் ஹர்திக் பேட்டிங்கில் பின்வரிசையில் மிரட்ட காத்துள்ளார்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஒருநாள் தொடரை முழுவதும் இழந்ததற்கு பழிவாங்க நினைப்பார்கள். சான்ட்னர் தலைமையில் களமிறங்கும் அந்த அணியில் கடந்த ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய கான்வே அசுர பலமாக உள்ளார். பிலிப்ஸ், பின் ஆலன், மிட்செல், பிராஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் அசத்துவார்கள்.
பந்துவீச்சில் சோதி, பெர்குசன், டிக்னெர் சிறப்பாக வீச வேண்டியது கடமை ஆகும்.
இந்திய அணி டி20 தொடரையும் வெற்றியுடன் தொடங்குகின்றனரா? நியூசிலாந்து 2023ம் ஆண்டில் இந்திய மண்ணில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்கின்றனரா? என்று பார்ப்போம்.