இந்தியா – இலங்கை தொடர் முடிவடைந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து தொடர் தொடங்கியுள்ளது. இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுவதற்காக நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்துள்ளது.
இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை வில்லியம்சன் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. டாம் லாதம் தலைமையில் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி இந்திய அணியை போல சம பலம் கொண்ட அணியாகவே களமிறங்கியுள்ளது.
இலங்கை தொடருக்கு பிறகு இந்திய அணி அசுர பலம் கொண்டுள்ளது. அதற்கு காரணம் விராட்கோலியின் பேட்டிங் என்றே சொல்லாம், மூன்று ஒருநாள் போட்டிகளில் 2 அசத்தலான சதங்கள் மூலம் இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார். மேலும், சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளார்.
இந்திய வீரர் விராட்கோலிக்கு மிகவும் பிடித்தமான அணிகளில் நியூசிலாந்து அணியும் ஒன்று என்றே கூறலாம். அந்தளவிற்கு தனது ஆதிக்கத்தை விராட்கோலி நியூசிலாந்து அணிக்கு எதிராக செலுத்தியுள்ளார். விராட்கோலி இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக 26 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அந்த போட்டிகளில் அவர் 1378 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 8 அரைசதங்களும், 5 சதங்களும் அடங்கும். அந்த 5 சதங்களில் 4 சதங்கள் சொந்த நாட்டு மைதானத்தில் அடிக்கப்பட்டவை ஆகும்.
விராட்கோலிக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கரும், ஜெயசூர்யாவும் மட்டுமே நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 சதங்களை விளாசிய வீரர்கள் ஆவார்கள். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தன்வசம் வைத்துள்ளார். அவர் 7 சதங்களை விளாசியுள்ளார்.
இதனால், நாளை நடைபெறும் போட்டியிலும் விராட்கோலி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவாரா..? என்பதை பொறுத்திருந்து பாரக்கலாம். விராட்கோலியை வீழ்த்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பு வியூகம் வகுத்திருப்பார்கள். அதை எவ்வாறு அவர் வீழ்த்துகிறார் என்பது நாளை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 49 சதங்களை விளாசியுள்ளார். விராட்கோலி சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 4 சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.