Thursday, June 1, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்ஆஸ்திரேலிய அணிக்கு என்னதான் ஆச்சு..? பழைய போர்க்குணம் எங்கே?

ஆஸ்திரேலிய அணிக்கு என்னதான் ஆச்சு..? பழைய போர்க்குணம் எங்கே?

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்த முறையும் இழந்துள்ளது. குறிப்பாக, நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற எந்த வாய்ப்புமே இல்லாமல் இருந்தது. ஆனால், டெல்லியில் நேற்று நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் நேற்றைய நிலவரப்படி வெற்றி வாய்ப்பு ஆஸ்திரேலியாவிற்கே பிரகாசமாக இருந்தது.

ஆனால், ஆட்டம் நேற்று தொடங்கியபோது ஜடேஜா ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இந்தியாவின் பக்கம் கொண்டு வந்துவிட்டார். அவரது சுழலில் ஆஸ்திரேலிய அணி சீட்டுக்கட்டுகள் போல சரிந்தது. நேற்று காலை ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அடுத்து 115 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் எளிதாகவே வென்றது எனலாம். ஒரு காலத்தில் அதாவது 90ஸ் கிட்ஸ்களின் நினைவில் நிற்கும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் வெற்றி என்ற வார்த்தையை மட்டுமே வாகை சூடி வந்தது, வெளிநாட்டு அணிகளுக்கு அதாவது மேலை நாட்டு அணிகளுக்கு எப்போதுமே ஆசிய மைதானங்கள் சவால் நிறைந்ததாகவே இருக்கும். குறிப்பாக, இந்திய மைதானம் மிகவும் கடினமானதாக இருக்கும்.

ஆனால், அதிலும் ஆஸ்திரேலிய அணி தடுமாறாமல் வெற்றியை பெறும் அளவிற்கு விளையாடும். தோற்றாலும் சவால் மிகுந்த ஆட்டமாகவே இருக்கும். ஆனால், இப்போது பாட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணியில் உத்வேகம், ஆர்ப்பரிப்பு, வேகம் என்று எதையுமே பார்க்க முடியவில்லை. மிக எளிதாக சரண் அடைந்து விடுகின்றனர். அதுவும் ஆஸ்திரேலியாவின் 2வது இன்னிங்சில் 2 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள். அதுவும் நேற்று மாலை மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் எடுத்தது.

ஸ்டீவ் ஸ்மித், லபுசேனே, கவாஜா உள்பட 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். தற்போதுள்ள நிலவரப்படி இரு அணிகளிலும் பேட்டிங் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை. இந்தியாவில் ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் போன்றோர்தான் டெயிலண்டரில் இந்தியாவை காப்பாற்றுகின்றனர். ஆஸ்திரேலிய அணியிலும் அந்த கதைதான் தொடர்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணியிடம் பழைய தன்னம்பிக்கை என்பது அடியோடு காணாமல் போய்விட்டதுபோலவே அவர்கள் ஆடுகின்றனர்.

உலகத்தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி இதுபோன்று மோசமாக ஆடுவதை எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் பார்க்க விரும்பமாட்டார்கள். இனி வரும் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 ALSO READ |  இந்தியாவுக்காகவும், பாகிஸ்தானுக்காகவும் கிரிக்கெட் விளையாடுனவங்க யார்? யார்? தெரியுமா.?