இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி எந்த நேரத்தில் இந்தியாவில் காலடி எடுத்து வைத்து என்று தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது முதல் அந்த அணிக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது.
உலகின் எந்த நாட்டிற்கு சென்றாலும் கோலோச்சும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவில் சறுக்கல் சறுக்கல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக, டெல்லியில் வெற்றியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலிய அணியை ஜடேஜா தனது சுழலில் சாய்த்து மட்டுமில்லாமல் வெற்றியையும் தடுத்துவிட்டார். இதனால், பார்டர் கவாஸ்கர் கோப்பையும் பறிபோனது.
பாட் கம்மின்ஸ் விலகல்:
ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கனவே சொதப்பி வரும் நிலையில், அந்த அணிக்கு தன்னம்பிக்கை அளித்து வந்த பாட் கம்மின்ஸ் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவரது தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, காயம் காரணமாக முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடிய வார்னர் கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம் டேவிட் வார்னர். அவர் டெஸ்ட் போட்டியில் ஆடாததே ஆஸ்திரேலிய அணிக்கு பலவீனமாக மாறியுள்ள நிலையில், தற்போது கம்மின்சும் விலகியிருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணிக்கு தற்போதைய நம்பிக்கை ஸ்மித் தலைமையில் களமிறங்குவது மட்டுமே.
ஸ்மித் மட்டுமே நம்பிக்கை:
ஏனென்றால் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய கேப்டன்களிலே சிறந்த கேப்டன் ஆவார். பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்குவதற்கு முன்புவரை ஆஸ்திரேலிய கேப்டனாக அசத்தி வந்தவர். அந்த சம்பவத்திற்கு பிறகு கம்பேக் அளித்தவர் ஆஸ்திரேலிய நிரந்தர கேப்டனாக மாறுவதற்கு மட்டும் எதிர்ப்புகளும்,. தடைகளும் இருந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய வார்னர், கம்மின்ஸ் இல்லாமல் கடைசி 2 டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது.
இதனால், அந்த அணிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை ஆகும். இருப்பினும் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலிய வீரர்கள் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்.