சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம் எஸ் தோனி குறித்து அஸ்வின் இப்பொழுது ஒரு சில நினைவலைகளை பகிர்ந்துள்ளார். அதாவது தோனி தனது ஓய்வை அறிவித்த , கடைசி டெஸ்ட் போட்டியில் அவரின் ஜெர்சியில் கண்ணீர் துளிகள் இருந்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு மூன்று வித கோப்பைகளை வென்று கொடுத்த வீரர் என்ற சாதனை படைத்தவர் தோனி. இவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, அணியை சரியான பாதையில் அழைத்து சென்று இந்தியா பல சாதனைகள் படைக்க உறுதுணையாக நின்றவர் தோனி.
ஆனால், கடந்த ஒரு சில வருடங்களாக தோனி தனது பழைய பார்மிற்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தார். அதே போல் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் புறக்கணிக்கப்படுத்து வந்தார். அதுமட்டுமின்றி, 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரிலும் எதிர்பார்த்த அளவிற்கு அவரது ஆட்டம் அமையவில்லை.
2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் சர்வதேச போட்டியில் தோனியை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு டோனி திடீரென்று ஓய்வை அறிவித்தார். தோனியின் தீடிர் ஓய்வுக்கு பின் ஒரு சில அரசியல் பின்புலமும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், தோனி பற்றி ஒரு விஷயத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது , “எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் அணியை வெற்றிப் பெற செய்வதற்காக நாங்கள் இருவரும் களத்தில் போராடிக்கொண்டிருந்தோம்.
ஆனால் இறுதியில் அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியைத் தழுவினோம். அப்போது அவர் ஸ்டெம்பை பிடுங்கிக் கொண்டு முடிந்துவிட்டது என்று கூறி அமைதியாக நடந்தார். அவருக்கு அது மிகவும் நெகிழ்ச்சிகரமான தருணமாக இருந்தது.
மாலை வேளையில் அவருடன் நான், இஷாந்த் ஷர்மா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் இருந்தோம். அவர் போட்டிக்காக அணிந்திருந்த ஜெர்ஸியை கழட்டவே இல்லை. அன்றைய இரவு முழுவதும் அவர் அந்த ஜெர்ஸியை அணிந்திருந்தார். அதில் சில துளி கண்ணீரும் இருந்தது என்று கூறியுள்ளார்”.