ஷார்ஜா : இளம் வீரர்களை நம்பி களமிறங்கிய சென்னை அணி மொத்தமாக விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் தனி ஒருவனாக போராடிய சுட்டி குழந்தை சாம் கரன் கடைசி பால் வரை போராடி சிஎஸ்கேவின் மானத்தை காப்பாற்றியுள்ளார்.
இந்த வருட ஐபிஎல் தொடர் முழுவதுமே சிஎஸ்கே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. மோசமான பேட்டிங் ஆர்டர், சொல்லிக்கொள்ளும் படியாக இல்லாத பவுலிங் ஆர்டர் என பாவப்பட்ட ஒரு அணியாக தான் இருந்தது. இந்த சீசனில் இதுவரை சிஎஸ்கே ஆடிய 10 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னையின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் மோசமான பேட்டிங். யாரை எந்த இடத்தில் களமிறக்குவது என ஐபிஎல் தொடரின் இறுதி வரை வந்தும் ஒரு தெளிவு இல்லாமல் சோதனை முயற்சியாகவே எல்லா போட்டிகளிலும் முயற்சி செய்து பார்த்தனர். சாம் கரணை ஓப்பனிங் களமிறங்கியது ஒரு போட்டியில் மட்டுமே கைகொடுத்தது. மற்ற போட்டிகளிலும் பெரிய மாற்றங்களை கொடுக்கவில்லை. முதல் பாதியில் மோசமான தோல்வியை சந்தித்திருந்தாலும் இரண்டாம் பாதியில் நிச்சயம் மீண்டு வரும் என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது . ஆனால் இரண்டாம் பாதியிலும் அதே நிலை தான் தொடர்ந்தது.
இதற்கிடையே தான் மற்ற அணிகளில் எல்லாம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் அசத்தும் நிலையில், சென்னை அணியில் மட்டும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மோசமாக ஆடினாலும் மூத்த வீரர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக கடந்த போட்டியின் முடிவில் தோனியிடம் கேட்டபோது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பே வழங்காமல் எப்படி அவர்களது திறமையை குறைத்து மதிப்பிடலாம் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் இம்ரான் தாஹிரை எடுக்காததும் சர்ச்சையானது.
இந்த நிலையில் தான் இந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வாட்சன் மற்றும் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெகதீசன் வாய்ப்பு பெற்றனர். அதேபோல ஸ்பின் பவுலிங்கில் பியூஷ் சாவ்லாவுக்கு பதில் இம்ரான் தாஹிர் இடம் பிடித்தார்.
ஆனால் இன்றைய போட்டியில் களமிறங்கிய இளம் வீரர்கள் உட்பட ஒட்டுமொத்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இந்த போட்டியில் ஓப்பனிங் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளஸிஸ் களமிறங்கினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்ராஜ் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுக்க அவ்வளவுதான் சீட்டு கட்டு சரிந்தது போல சென்னை அணியின் பேட்டிங் சரிய தொடங்கியது. ஒருகட்டத்தில் 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ருத்ராஜ் 0 ரன்களும், டு பிளசிஸ் 1, ராயுடு 2, ஜெகதீசன் 0, தோனி 16, ஜடேஜா 7, தீபக் சாகர் 0, ஷர்துள் தாகூர் 11 ரன்களும் எடுத்தனர். ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மிக மோசமான ஒரு போட்டியாக இது மாறியுள்ளது.
50 ரன்களை கூட எட்டுமா என்கிற நிலையில் சாம் கரன் மட்டுமே தனி ஒருவனாக சென்னை அணியை காப்பாற்ற போராடினார். கடைசி வரைக்கும் போராடிய சாம் கரன் 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து சென்னை அணியின் மானத்தை காப்பாற்றினார். அதேபோல கடைசி நேரத்தில் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இம்ரான் தாஹிரும் சாம் கரனுடன் ஜோடி சேர்ந்து 10 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். இதனால் ஒருவழியாக சிஎஸ்கே 114 ரன்கள் எடுத்ததன் மூலம் மிக குறைந்த ரன்கள் எடுத்த அணி என்கிற மோசமான சாதனையில் இருந்து தப்பியது.