Monday, November 28, 2022
Homeவிளையாட்டு செய்திகள்கிரிக்கெட் செய்திகள்இது சரி வராது.. சிஎஸ்கேவில் மாற்றம் வேண்டும்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

இது சரி வராது.. சிஎஸ்கேவில் மாற்றம் வேண்டும்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

ஷார்ஜா : இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் சென்னை அணியில் மாற்றங்கள் வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை அணி மோசமாக ஆடி வருகிறது. 2010 ஆம் ஆண்டை போல இரண்டாம் பாதியில் சிஎஸ்கே கம் பேக் கொடுக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு டெல்லிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த சீசன் முழுவதும் சென்னை அணிக்கு சேஸிங் கடினமாக இருந்தது, மேலும் ஷார்ஜா மைதானம் மிகவும் சிறியது என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்களை இலக்கு நிர்ணயிக்க முடியும்.

ஆனால் சென்னை அணி மிடில் ஓவர்களில் கொஞ்சம் தடுமாற 160 ரன்களை எடுப்பதே கடினமாக இருந்தது. பின்னர் கடைசி நேரத்தில் ஜடேஜாவின் அதிரடியின் மூலம் 180 ரன்களை இலக்காக டெல்லிக்கு நிர்ணயித்தது . பின்னர் ஆடிய டெல்லி அணி ஒருபக்கம் விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் மறுபக்கம் அதிரடி காட்டிய ஷிகர் தவனால் தோல்வியில் இருந்து தப்பித்தது. ஷிகர் தவான் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். ஆனால் தவான் 100 ரன்களை எட்டுவதற்கு சிஎஸ்கேவின் மோசமான பீல்டிங்கும் ஒரு காரணம்.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியின் போது தவான் 4 கேட்சுகளை கொடுத்தார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே தவான் கொடுத்த கேட்சுகளை சென்னை அணி வீரர்கள் தவற விட்டதே அவர்களுடைய தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. பின்னர் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட முக்கியமான நேரத்தில் சிஎஸ்கேவில் டெத் ஓவர் வீசக்கூடிய பிராவோ காயம் காரணமாக சென்றுவிட்டதால் அவருக்கு பதில் ஸ்பின் பவுலரான ஜடேஜா பந்துவீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் தீபக் சாகருடைய 4 ஓவர்களும் முன்பே முடிந்துவிட்டதால், ஷர்துல் தாகூர் மற்றும் சாம் கரண் இருவரையும் 18 மற்றும் 19ம் ஓவர்களில் பயன்படுத்திவிட்டதால் 20 வது ஓவர் வீச சென்னை அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை.

இதுதான் சென்னையின் பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சென்னை அணியில் இருந்து ரெய்னா மற்றும் ஹர்பஜன் சென்றுவிட்ட நிலையில் அவர்களுக்கு மாற்றாக யாரையும் இதுவரை சிஎஸ்கே எடுக்கவில்லை. இருப்பவர்களிலும் அதிரடியான வீரர்கள் என யாரும் இல்லை. சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே வலுவானதாக இல்லை.

பும்ரா, ரபடா , ரஸ்ஸல், ரஷீத் கான், நடராஜன், பொல்லார்ட், ஏபி டி வில்லியர்ஸ், நோர்ஜே, ஹர்திக் பாண்டியா போன்ற மற்ற அணிகளில் இருப்பது போல எதிரணியை அச்சுறுத்தக்கூடிய வீரர்கள் சிஎஸ்கேவில் இல்லை. தோனியும் இப்போது முழு பார்மில் இல்லை, இதனால் தோனி களத்தில் நிற்கும் போது எதிரணிகள் பயந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. ஜடேஜா மட்டுமே சில போட்டிகளாக அதிரடியாக ஆடுகிறார் மேலும் சாம் கரன் மற்றும் டு பிளசிஸ் மட்டுமே சென்னை அணியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மற்றவர்கள் எப்போது சொதப்புவார்கள் என்கிற நிலையற்ற தன்மை தான் உள்ளது.

மேலும் அதிக வயதான வீரர்கள் இருப்பதால் சென்னை அணியில் பெரும்பாலும் இரண்டு ரன்கள் ஓடுவதே கிடையாது. பெங்களூர் போன்ற அணிகளில் மிடில் ஓவர்களில் டாட் பால் அதிகம் விழாமல் தவிர்க்க சிங்கிள்ஸ் மற்றும் இரண்டு ரன்களை அதிகம் ஓடுவர். ஆனால் சென்னை அணி வீரர்களுக்கு வயது காரணமாக அவ்வளவு ரன்கள் ஓடி எடுப்பதும் கடினமாக உள்ளது. இதனால் சென்னை அணியில் முழுவதுமாக மாற்றங்கள் வேண்டும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.

குறிப்பாக டெல்லி போன்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஜெகதீசன் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பிலும் தன்னுடைய திறமையை காண்பித்தும் அவருக்கு பதில் மீண்டும் கேதார் ஜாதவ் தான் அணியில் இடம் பிடித்தார். இது ரசிகர்களுக்கு மேலும் ஏமாற்றத்தை கொடுத்தது. சென்னை அணியில் இருக்கும் சாவ்லா, கேதார் ஜாதவ், முரளி விஜய், கரண் சர்மா இவர்களை எல்லாம் மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர். ரெய்னா மற்றும் ஹர்பஜன் போன்றோரும் இந்த சீசன் விளையாடாத நிலையில் அவர்களும் அடுத்த சீசனில் முழு பார்மில் விளையாடுவதும் சந்தேகம் தான். இதனால் அடுத்த சீசனில் சென்னை அணியில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தால் மட்டுமே சிஎஸ்கேவின் ஆட்டத்திலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இந்த சீசனில் சென்னை ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழைய வேண்டுமானால் இன்றிலிருந்து மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments