Monday, November 28, 2022
Homeவிளையாட்டு செய்திகள்கிரிக்கெட் செய்திகள்இதை தான் இவ்வளவு நாட்களும் எதிர்பார்த்தோம்.. புதிய அணியுடன் பெங்களூரை வீழ்த்திய சென்னை

இதை தான் இவ்வளவு நாட்களும் எதிர்பார்த்தோம்.. புதிய அணியுடன் பெங்களூரை வீழ்த்திய சென்னை

துபாய்: முற்றிலும் புதிய அணியுடன் பெங்களூருக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதத்துடன் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரின் 44வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பீல்டிங் செய்யும் அணி அதிகப்படியான வெயிலில் நிற்க வேண்டும் என்பதால் பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய போட்டியின் போது பெங்களூர் அணி வீரர்கள் பசுமையை வலியுறுத்தும் விதமாக பச்சை கலர் ஜெர்சியுடன் களமிறங்கினர். ஒவ்வொரு வருடமும் ஒரு போட்டியில் விழிப்புணர்வுக்காக இப்படி களமிறங்குவது வழக்கம்.

ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணி இனி வரும் போட்டிகள் எல்லாமே சோதனை முயற்சிகளிலேயே விளையாடுகிறது. அதன் அடிப்படையில் ஏற்கனவே கடந்த போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் நாராயணன் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் அவர்கள் அதிகப்படியான அழுத்தத்தில் சொதப்பியிருந்தாலும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ஹேசல்வுட்டுக்கு பதில் மிச்செல் சான்டனருக்கும் ஷரத்துள் தாகூருக்கு பதில் மோனு குமாருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது. இடையில் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைத்த பின்னர் மீண்டும் போட்டி சிஎஸ்கே பக்கம் திரும்பியது. இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 145 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோலி மட்டுமே 43 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் பவுலிங்கில் சாம் கரன் அசத்தலாக 3 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அடுத்து களமிறங்கிய சென்னை அணியில் ருத்ராஜ் மற்றும் டு பிளசிஸ் ஓப்பனிங் கொடுத்தனர். ஆனால் டு பிளசிஸ் 25 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து வந்த ராயுடு 39 ரன்களும் எடுத்தார்.இவர்கள் இருவரும் உடனே விக்கெட்டை இழந்தாலும் மறுபக்கம் ருத்ராஜ் அதிரடியான தொடக்கம் கொடுத்தார். இறுதிவரை களத்தில் நின்று 51 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சிஎஸ்கே 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்படியான ஒரு பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டரை தான் இத்தனை நாட்களும் சிஎஸ்கே ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ஹேசல்வுட் மாற்றாக கொண்டுவந்த சான்டனரும் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அதேபோல இம்ரான் தாஹிரும் கட்டுக்கோப்பாகவே பவுலிங் செய்தார். ஓப்பனிங் இறங்கிய ருத்ராஜ் தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார். ஷரத்துள் தாகூருக்கு பதில் இறங்கிய மோனு குமார் மட்டுமே 2 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இவரை மட்டுமே மாற்றிவிட்டு ஷரத்துள் தாகூரை கொண்டுவந்து இதே அணியுடன் சென்னை மீதமிருக்கும் போட்டிகளில் களமிறங்கினால் நிச்சயம் கடைசி இடத்தையாவது தவிர்க்க முடியும்.

ஏனெனில் பியூஷ் சாவ்லா மற்றும் கரண் ஷர்மாவை விட இம்ரான் தாஹிர் நன்றாக பவுலிங் செய்ய கூடியவர். அதேபோல சான்டனர் இருப்பதால் கூடுதல் ஒரு ஸ்பின் பவுலர் அணியில் இருப்பார், சான்டனர், சாம் கரன் போல அதிரடியாக பேட்டிங் செய்பவரும் கூட, அதனால் கூடுதலாக ஒரு ஆல் ரவுண்டர் மூலம் பிராவோவின் இடத்தை நிரப்ப முடியும். தீபக் சாஹர், சாம் கரன், ஷரத்துள் தாகூர் என 3 வேகப்பந்து வீச்சாளர்களும், சான்டனர், ஜடேஜா, இம்ரான் தாஹிர் என 3 ஸ்பின் பவுலர்களும், ஓப்பனிங் பேட்டிங்கிற்கு ருத்ராஜ், டு பிளசிஸ், மிடில் ஆர்டரில் ஜடேஜா, சாம் கரன், ஜெகதீசனும் இருப்பர். ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும் இதே அணியுடன் சிஎஸ்கே இன்னும் சில போட்டிகளில் பங்கேற்று உறுதியான ஒரு அணியை அமைத்தால் குறைந்தது கடைசி இடத்தை பிடிப்பதில் இருந்தாவது தப்பிக்க முடியும்.

- Advertisment -

Most Popular

Recent Comments