Monday, May 29, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய சேத்தன்சர்மா ராஜினாமா..! அடுத்து நடக்கப்போவது என்ன?

ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய சேத்தன்சர்மா ராஜினாமா..! அடுத்து நடக்கப்போவது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பு வகித்தவர் சேத்தன்சர்மா. இவரிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தது.

ஸ்டிங் ஆபரேஷன்:

அதில், அவர் இந்திய அணியின் சூப்பர்ஸ்டார் வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்காத அளவிற்கு ஊசியை பயன்படுத்துகின்றனர் என்றும் அவர்களின் உடற்தகுதியை நிரூபிப்பதற்காக அவர்கள் இதை செய்கின்றனர் என்றும் கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேலும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்பு வகித்த சவ்ரவ் கங்குலிக்கு விராட்கோலியை சுத்தமாக பிடிக்காது என்றும், ரோகித்சர்மாவுக்கம், விராட்கோலிக்கும் இடையே ஈகோ உள்ளது என்றும் கூறியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜினாமா:

இந்த வீடியோ வைரலாகி இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது கண்டனங்கள் குவிந்த நிலையில், சேத்தன்சர்மா மீது அழுத்தங்கள் அதிகரித்தது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பை சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்து வந்த சேத்தன்சர்மா இனறு ராஜினாமா செய்துள்ளார்.

சேத்தன் சர்மா ராஜினாமா செய்தாலும் அவர் கூறிய தகவல்கள் பூதாகரமாகவே உள்ளது. குறிப்பாக, இந்திய வீரர்கள் பயன்படுத்தும் ஊசியானது ஊக்கமருந்து ஊசியா? அவர்கள் சிக்காமல் தப்பிப்பது எப்படி? இந்த விவகாரங்கள் அனைத்தும் தெரிந்தும் பி.சி.சி.ஐ. அமைதி காத்தது ஏன்? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

கேள்விகளும், கண்டனங்களும்:

மேலும், உலகின் முக்கியமான கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. ஐ.சி.சி.க்கு பெரிய அளவில் வருவாயை கொட்டித் தரும் அணிகளில் இந்தியா தவிர்க்க முடியாதது. இந்த நிலையில், பி.சி.சி.ஐ. மீது எழுந்துள்ள விமர்சனங்களும். சேத்தன் சர்மாவின் தகவல்களுமே ஐ.சி.சி. அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வீரர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பி.சி.சி.ஐ. மௌனம் காத்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில்தான் சேத்தன்சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், இந்த விவகாரம் குறித்து பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளதால் புதிய தேர்வுக்குழு தலைவர் யார்? என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும், சேத்தன் சர்மாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

ALSO READ | இந்திய அணிக்காக இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்கள் யார்? யார்?