Thursday, June 1, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்இந்தியா – ஆஸ்திரேலியா நேருக்கு நேர்..! இதுவரை வரலாற்றில் நடந்தது என்ன?

இந்தியா – ஆஸ்திரேலியா நேருக்கு நேர்..! இதுவரை வரலாற்றில் நடந்தது என்ன?

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்க உள்ள நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் வரலாற்றை ஒரு முறை திரும்பி பார்க்கலாம்.

1947ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 102 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ளன. இதில் 30 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், 43 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையிலும், 28 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளது.

அதிக ரன்கள்

இரு அணிகளுக்கும் இடையேயான அதிகபட்ச ரன்கள் எடுத்ததில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 39 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3630 ரன்களை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளாசியுள்ளார். அதில் 16 அரைசதங்களும், 11 சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 241 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா தரப்பில் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார். அவர் 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12 அரைசதங்கள், 8 சதங்களுடன் 2555 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 257 ரன்கள் விளாசியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக அனில் கும்ப்ளே உள்ளார். அவர் 20 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 94 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

அதிக விக்கெட்டுகள்

இந்தியா சார்பில் ஒரு இன்னிங்சில் தனிநபர் அதிகபட்சமாக லட்சுமணன் உள்ளார். அவர் 2001ம் ஆண்டு 281 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலியா சார்பில் மைக்கேல் கிளார்க் 2012ம் ஆண்டு சிட்னியில் 329 ரன்களை ஆட்டமிழக்காமல் விளாசினார். இந்தியா சார்பில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை ஜாசுபாய் படேல் 1959ம் ஆண்டு 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் ஒரு இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியா ஒரு போட்டியில் அதிகபட்சமாக 705 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலியா 674 ரன்களை குவித்துள்ளது. இந்தியா தனது குறைந்தபட்ச ஸ்கோராக 36 ரன்களை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா 83 ரன்களை பதிவு செய்துள்ளது.