Monday, May 29, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்அஸ்வினா..? நாதன் லயனா..? சுழல் யுத்ததில் மகுடம் சூட்டப்போவது யார்?

அஸ்வினா..? நாதன் லயனா..? சுழல் யுத்ததில் மகுடம் சூட்டப்போவது யார்?

புகழ்பெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் நாக்பூரில் நடைபெற உள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடராக நடக்கும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் என்பதால் இந்த தொடரில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சாதனைகள் மேல் சாதனைகள் படைக்க வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. டெஸ்ட் போட்டிகளை பொறுத்தமட்டில் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும்.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வினுக்கும், ஆஸ்திரேலியாவின் நாதன் லயனுக்கும் நடக்கும் மோதல் என்றே இந்த தொடரை கூறலாம். இரு அணிகளுக்குமே இவர்கள் இருவருமே துருப்புச்சீட்டு ஆவார்கள். ஆஸ்திரேலிய அணி அஸ்வினைப் போல பந்துவீசும் இளைஞரை பந்துவீசவைத்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டது மூலமாகவே அவர்கள் அஸ்வின் சுழலை கண்டு எந்தளவு பயப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

நாதன் லயனும் அஸ்வினுக்கு சளைத்தவர் அல்ல என்பது ரசிகர்களுக்கு தெரியும். இவர்கள் இருவருமே தங்களது சுழலில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை பெற்றவர்கள். நாதன் லயன் இதுவரை இந்திய அணிக்கு எதிராக மட்டும் 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 50 ரன்களே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். அஸ்வின் 18 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடி 89 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 103 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

இந்த தொடர் முடிவதற்குள் இருவரும் இரு அணிகளுக்கு எதிராகவும் 100 விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. சுழல் யுத்தமாக நடக்கும் இந்த தொடரில் அஸ்வினா? நாதன் லயனா? மகுடத்தை சூடப்போவது யார்? என்பதை இறுதியில்தான் நாம் அறிய முடியும்.