Saturday, May 27, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்பங்களாதேஷ் பாய்ஸ்க்கு புது கோச்…! பயிற்சியாளர் மாற்றம் அணிக்கு கைகொடுக்குமா?

பங்களாதேஷ் பாய்ஸ்க்கு புது கோச்…! பயிற்சியாளர் மாற்றம் அணிக்கு கைகொடுக்குமா?

வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளிலே மிகவும் பலம் வாய்ந்த அணியாக வங்காளதேச அணி திகழ்கிறது. வால்ட்மோர் அந்த அணியின் பயிற்சியாளராக 2007ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றனர். அவருக்கு பிறகு ஏராளமான பயிற்சியாளர்கள் அந்த அணிக்கு வந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், வங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திகா ஹதுருசிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பயிற்சியாளராக இருந்த ரஸல் டோமிங்கோவின் பதவிக்காலம் முடிந்துள்ளதால் தற்போது சந்திகா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே வங்காளதேச அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்தவர்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வங்காளதேச அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக வங்காளதேச அணிக்கு பயிற்சியாளராக வருகிறார். இந்த முறை 2 ஆண்டு கால ஒப்பந்தத்தில் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேச அணியின் பயிற்சியாளராக இருப்பதற்கு வாய்ப்பு வழங்கியதை பெருமையாக கருதுகிறேன. வங்காளதேச மக்களின் வரவேற்பையும், அவர்களது பண்பாட்டையும் நான் நேசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 55 வயதான சந்திகா இதுவரை 26 டெஸ்ட் போட்டியில் ஆடி 8 அரைசதங்களுடன் 1274 ரன்களை எடுத்துள்ளார். 35 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 669 ரன்களை எடுத்துள்ளார். ஆல் ரவுண்டரான இவர் டெஸ்டில் 17 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

வங்காளதேச அணி சமீபகாலமாக மீண்டும் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அந்த அணி கடந்த டி20 உலகக்கோப்பையில் கூட மிக மோசமான தோல்விகளை சந்தித்தது. இதனால், அந்த அணி மீண்டும் உத்வேகத்துடன் எழ வேண்டியது அவசியமாகிறது. சந்திகாவின் இந்த வருகையால் வங்காளதேச அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு செல்லுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.