இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதே என்றே சொல்லலாம், ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்கு தூணாக விளங்கிய ரோகித்சர்மா, விராட்கோலி இருவரும் 34 வயதை கடந்துவிட்டனர். மேலும், இந்திய அணிக்கு பக்கபலமாக விளங்கிய ஷிகர்தவான், அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கும் 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டது.
வருங்கால இந்திய அணி:
புதிய மற்றும் இளம் இந்திய அணியை கட்டமைக்கும் நோக்கில் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பிறகு இந்திய அணி ஆடும் டி20 தொடர்களில் இவர்களுக்கு எல்லாம் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
விராட்கோலிக்கு இருக்கும் உடல் தகுதிக்கு அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால், கேப்டன் ரோகித்சர்மா 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். இதனால், இந்திய கிரிக்கெட் அணி புதிய தொடக்க வீரர்களை கண்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இஷான்-சுப்மன்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த தொடக்க வீரர்களாக சச்சின் – கங்குலி, சச்சின் – சேவாக், சச்சின்- கம்பீர், ரோகித் – தவான் ஆகியோர் விளங்கியுள்ளனர். இந்த கூட்டணி இந்திய அணிக்கு பல முறை வெற்றிக்கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், ரோகித்சர்மாவிற்கு துணையாக தொடக்க வரிசையில் ஆடி வந்த கே.எல்.ராகுல் தடுமாறி வருகிறார். அதனால், அவருக்கு பதிலாக சுப்மன்கில் தொடக்க வீரராக அசத்தி வருகிறார்.
ரோகித்சர்மா இல்லாதபோது இந்திய அணிக்காக தொடக்க வீரராக ஆடும் வாய்ப்பு பெற்ற இஷான்கிஷான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதனால், ரோகித்சர்மாவிற்கு பிறகு வருங்கால இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக சுப்மன்கில் – இஷான்கிஷான் ஜோடி ஆடுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகளவில் உள்ளது. இருவரும் இளம் வீரர்கள் என்பதால் இவர்கள் இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தினால் அடுத்த 6-8 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ஜோடி சிறப்பானதாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இளம் அணி
மேலும், மிடில் ஆர்டரில் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ், ரிஷப், கே.எல்.ராகுல். ஹர்திக் ஆகிய இளம் வீரர்கள் அசத்த வாய்ப்புள்ளது. இவர்களுடன் மற்ற வீரர்களும் அசத்தினால் இந்திய அணி பலமிகுந்த அணியாக வலம் வரும். ஏற்கனவே இந்திய அணிக்கு ரோகித்சர்மா இல்லாத தருணங்களில் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அசத்தி வருவதால் அடுத்த கேப்டனாக ஹர்திக் செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.