சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி திடீரென மயங்க் அகர்வாலுக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு வழங்கியது, ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் இந்த போட்டியிலும் இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. போன போட்டியில் விளையாடிய அதே அணி தான் இந்த போட்டியிலும் களமிறங்கியது. அதுவே ஆரம்பத்தில் பெரிய விமர்சனங்களை சந்தித்தது. சரியாக ஐந்து பவுலர்களுடன் களமிறங்கும் போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினால் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்படுவதற்கு கூட இந்திய அணியில் வாய்ப்பு இல்லை.
இப்படியான நிலையில் தான் இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியை தொடங்கியது. எதிர்பார்த்தது போலவே இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். இம்முறையும் விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறி வந்தனர். உலகின் சிறந்த பவுலரான பும்ரா மோசமான பார்ம் அவுட்டில் தவித்து வருகிறார். இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே முழுநேர ஸ்பின் பவுலர் சஹலின் பந்துவீச்சையும் கூட விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக விராட் கோலியின் முடிவு மீண்டும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
அப்போது தான் திடீரென ஹர்திக் பாண்டியாவை பந்துவீச கொண்டுவந்தார் கேப்டன் கோலி. ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக இருந்தாலும், காலில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாக அதன் பின்னர் பவுலிங் செய்வதை நிறுத்தி விட்டார். மீண்டும் பவுலிங் செய்தால் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் தான் திடீரென இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்ய வந்தார். கோலியின் இந்த முடிவு ஓரளவிற்கு கை கொடுத்தது. 4 ஓவர்கள் வீசிய பாண்டியா 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்ய வந்ததையே ஆச்சர்யமாக பார்த்த இந்திய அணி ரசிகர்களுக்கு, அடுத்த அதிர்ச்சியாக திடீரென மயங்க் அகர்வாலுக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு வழங்கினார் கோலி. 35 ஆவது ஓவரை வீசிய மயங்க் அகர்வால் அந்த ஒரு ஓவரில் 10 ரன்கள் விட்டு கொடுத்திருந்தார்.இதனால் அதன் பின்னர் அவருக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறைந்த பவுலர்களுடன் களமிறங்கியதால் விமர்சிக்கப்பட்ட விராட் கோலி இடையில் மாற்றங்களை செய்து சமாளிக்க பார்த்தார் ஆனால் அதுவும் கைகொடுக்க வில்லை. முழுநேர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால், 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 384 ரன்கள் எடுத்தது.