அபுதாபி : ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியால் சிஎஸ்கே புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய போட்டியின் போது மோசமான ஒரு சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது.
இந்த ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு மிகவும் கடினமானதாக மாறியுள்ளது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கினாலும் அதன் பின்னர் மோசமான தொடர் தோல்விகளால் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்ட நேற்றைய போட்டியிலும் தோல்வியடைந்ததை அடுத்து சென்னை மீதான நம்பிக்கை ரசிகர்களுக்கு மொத்தமாக தகர்ந்துவிட்டது. இனி வழக்கமாக பெங்களூர் அணிக்கு போடும் டேபிள் கால்குலேஷன் மூலம் தான் சென்னை ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை கண்டுபிடிக்க முடியும்.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் காயம் காரணமாக பிராவோ பங்கேற்கவில்லை, இந்த முறையாவது இம்ரான் தாஹிர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமாக இம்ரான் தாஹிருக்கு பதில் ஹேசல்வுட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதே போல் கேதார் ஜாதவும் அணியில் இடம் பிடித்திருந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கேவில் சாம் கரண், ஜடேஜா, தோனி தவிர மற்ற அணைத்து வீரர்களும் வந்த உடனே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தோனி மீண்டும் மீண்டும் பெரிய நம்பிக்கை வைத்த கேதர் ஜாதவ் வழக்கம் போல நேற்றைய போட்டியிலும் சொதப்பினார். நேற்றைய போட்டியின் போது சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்த ஐபிஎல் சீசனில் முதல் பேட்டிங்கில் மிக குறைந்த ரன்களை எடுத்த அணி என்கிற மோசமான சாதனையை சிஎஸ்கே படைத்துள்ளது.
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியிலும் தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் மற்றும் பட்லர் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களும், ஸ்மித் 26 ரன்களும் எடுத்தனர். நேற்றைய போட்டியின் போது ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைக்க கூடிய ஆடுகளத்தில் தோனி ஸ்பின் பவுலிங்கை அதிகம் பயன்படுத்தாமல் கடைசி நேரத்தில் பியூஷ் சாவ்லாவை கொண்டு வந்தது, இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு கொடுக்காதது உள்ளிட்ட கரணங்கள் பெரும் சர்ச்சையானது. ராஜஸ்தான் அணியில் நேற்றைய போட்டியில் ஸ்பின் பவுலர்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர்.
மோசமான அணித்தேர்வு, சொதப்பிய பேட்டிங் ஆர்டர் பவுலர்களை சரியாக பயன்படுத்தவில்லை என கூறி சமூக வலைத்தளங்களில் தோனி மீது கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. சென்னை அணி கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகளை இழந்துவிட்டது, இனி ஏதேனும் அதிசியம் நடந்தால் மட்டுமே சென்னைக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை சிஎஸ்கே ப்ளேஆஃப் செல்லவில்லை என்றால் சிஎஸ்கே வரலாற்றில் இதுதான் மோசமான சீசனாக இருக்கும். சென்னை அணி இதுவரை விளையாடிய அணைத்து ஐபிஎல் சீசன்களிலும் ப்ளே ஆஃப் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.