மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய டெஸ்ட் அணிக்கான முக்கியமான 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியில் என்ன தான் நடக்கிறது என்கிற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்தே இந்திய அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது தொடர்கதையாகி இருந்து வருகிறது. முதலில் ஹைதராபாத் அணியில் இடம்பெற்று இருந்த புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவருடைய காயம் குணமடையாததை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அவரை போலவே டெல்லி அணியில் இடம்பெற்ற இஷாந்த் ஷர்மா ஐபிஎல் தொடரின் போது காயம் காரணமாக வெளியேறியதால் அவர் தன்னுடைய பிட்னஸை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவரால் ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தபோதும் கூட டெஸ்ட் தொடரில் இஷாந்த் ஷர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் 2 முக்கிய பவுலர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி சமாளிக்க போகிறது என்கிற கேள்வி எழுந்தது.
அதேபோல இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவும் காயம் காரணமாக இந்த தொடரில் முதலில் சேர்க்கப்படவில்லை. அதன் பின்னர் நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகே டெஸ்ட் அணியில் மட்டும் ரோஹித் ஷர்மாவின் பெயர் இடம்பெற்றது. அதுவும் கடைசி 2 போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடியும். ஆரம்பம் தான் அப்படி என்றால் ஆஸ்திரேலியா சென்றதும் டி20 அணியில் இடம்பிடித்திருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டதால் அவரும் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாகவே நடராஜனுக்கு இந்திய அணியில் முதலில் வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் நவ்தீப் சைனியும் முழு உடல் தகுதியுடன் இல்லை என்று சொல்லப்பட்டது. அவரும் அவ்வப்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவரையும் முழுமையாக நம்ப முடியாது.
ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்த நிகழ்வு:
முதல் டி20 போட்டியின் போது ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து மீதமிருந்த இரண்டு டி20 மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்காமல் ஒய்வு கொடுக்கப்பட்டிருந்தது. எப்படியோ ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை நிறைவு செய்த இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் மீண்டும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. மூத்த வீரர் முகம்மது ஷமிக்கு இரண்டாவது இன்னிங்சில் கையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவரும் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார்.
இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷமிக்கு பதில் சிராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது உமேஷ் யாதவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தாத உமேஷ் யாதவ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அதற்குள்ளாகவே எட்டாவது ஓவரில் அவருக்கு காயம் ஏற்பட அவரும் போட்டியின் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
இதன் காரணமாக இந்திய அணி 2 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீதமிருக்கும் போட்டிகளில் உமேஷ் யாதவ் விளையாடுவாரா என்பதும் சந்தேகமே. இப்படிப்பட்ட சூழலில் இந்திய அணியில் பும்ரா மட்டுமே ஒரே அனுபவ வீரர். சிராஜ்க்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டி, மீதமிருக்க கூடிய சைனியும் முழு பார்மில் இல்லை. வலை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நடராஜனை பயன்படுத்தினாலும் அவருக்கும் அது முதல் டெஸ்ட் போட்டியாகவே இருக்கும். ஏற்கனவே கேப்டன் கோலி இல்லாத சூழலில் முக்கிய பவுலர்கள் யாரும் இல்லாமல் இந்திய அணி மீதமுள்ள போட்டிகளை எப்படி எதிர்கொள்ள போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது. வீரர்களுக்கு இப்படி தொடர்ந்து காயம் ஏற்படுவதும் தொடரில் இருந்து வெளியேறுவதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் இந்திய அணியை பலவீனமாக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.