துபாய்: 2020 ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு 100 கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020 ஐபிஎல் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டியில் வென்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. ஆனால் 2020 ஐபிஎல் தொடர் நடைபெறுவதிலேயே தொடக்கத்தில் பல சிக்கல் எழுந்தது. மார்ச் 29 தேதி தான் முதலில் 2020 ஐபிஎல் தொடர் அதிகாரபூர்வமாக நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவில் நிலைமை மேலும் மோசமடைவதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஐபிஎல் தொடரை நடத்தாமல் ரத்து செய்ய பட்டிருந்தால் பிசிசிஐக்கு சுமார் 3 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கும், அதை தவிர்க்கவே வெளிநாடுகளில் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் போட்டிபோட்டன.
ஐபிஎல் தொடர்
கொரோனாவால் கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டியது. ஆனால் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்திய அனுபவம் இருப்பதால் இந்த முறையும் அங்கு போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்தது. அங்கு துபாய், ஷார்ஜா, மற்றும் அபுதாபி மைதானத்தில் வைத்து ஐபிஎல் தொடர்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே சீன நிறுவனம் எதிர்ப்பு காரணமாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த விவோ நிறுவனமும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவை அத்தனையும் கடந்து செப்டம்பர் மாதம் தொடங்கிய 2020 ஐபிஎல் தொடர் நவம்பர் 10ம் தேதி முடிவடைந்தது. இந்த தொடரில் இறுதி போட்டியோடு சேர்த்து மொத்தம் 60 போட்டிகள் நடைபெற்றன. இதற்காக பிசிசிஐ 14 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் வரை எமிரேட்ஸ் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை பார்க்க பெரிதாக தெரிந்தாலும் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்தியிருந்தால் ஒரு போட்டிக்கு ஒரு கோடி என்கிற கணக்கில் 60 கோடி வரை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கொடுக்க வேண்டி இருந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த 100 கோடி தவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வணிகத்திலும் ஐபிஎல் பெரும் பங்கு வகித்துள்ளது. அங்கு சுமார் 14 ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மூன்று மாதங்களுக்கு நிரம்பி வழிந்துள்ளன. ஆனால் ஐபிஎல் தலைவரிடம் இருந்தோ அல்லது எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் இருந்தோ இதுவரை இதுதொடர்பாக அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.