Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்ஆல் ரவுண்டராக அசத்தும் அக்‌ஷர் படேல்! தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படுமா?

ஆல் ரவுண்டராக அசத்தும் அக்‌ஷர் படேல்! தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படுமா?

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுவரை நடந்த 2 டி20 போட்டிகளுமே ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தது என்றே கூறலாம். இரு போட்டிகளும் பரபரப்பாகவே சென்றது. நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அக்ஷர் படேல் பேட்டிங் இந்திய ரசிகர்களுக்கு இனிப்பாகவே அமைந்தது என்று கூறலாம்.

முன்னணி வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ்வும் 51 ரன்களில் ஆட்டமிழக்க 148 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணி அவ்வளவுதான் என்று இருந்தபோது மைதானத்தில் வான வேடிக்கை காட்டி அசத்தினார் அக்ஷர்.

டெயிலண்டராக களமிறங்கிய அவர் 31 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 65 ரன்கள் விளாசினார். கடைசி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில்தான் அவர் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியிலும் அக்ஷர் படேல் ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்கள் விளாசினார். ஐ.பி.எல். போட்டிகளிலும் அக்ஷர் படேல் இதுபோன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணி சமீபகாலமாக பினிஷர் மற்றும் டெயிலண்டர் வரிசையில் ஜடேஜா இல்லாததால் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. அக்ஷர் படேல் பந்துவீச்சாளராகவும் சுழலில் அசத்தி வருகிறார். பேட்டிங்கிலும் நெருக்கடியான நேரத்தில் கை கொடுக்கிறார். 28 வயதே ஆன அக்ஷர் படேலுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளிக்கப்படாமல் அவ்வப்போது மட்டுமே வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு மட்டும் இனி வரும் காலங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் அவர் நிச்சயம் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக வலம் வருவார். மேலும், டெயிலண்டர் வரிசையிலும் இந்திய அணியின் பேட்டிங் பலம் அதிகரிக்கும். அக்ஷர் படேல் இதுவரை 46 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 349 ரன்கள் எடுத்துள்ளார். 39 டி20 போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 267 ரன்கள் எடுத்துள்ளார். 122 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1135 ரன்கள் எடுத்துள்ளார். 8 டெஸ்ட் போட்டியில் 1 அரைசதத்துடன் 249 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட்டில் 47 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 55 விக்கெட்டுகளும், டி20யில் 36 விக்கெட்டுகளும், ஐ.பி.எல். போட்டியில் 101 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இனி வரும் நாட்களில் அக்ஷர் படேலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படுமா? என்று பார்க்கலாம்