Tuesday, March 28, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்விராட் கோலி தான் இதுல எப்பவும் சிறந்த வீரர்.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கேப்டன்!

விராட் கோலி தான் இதுல எப்பவும் சிறந்த வீரர்.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கேப்டன்!

சிட்னி : விராட் கோலி எல்லா காலங்களிலும் சிறந்த ஒருநாள் தொடருக்கான வீரர் என்று ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நாளை நடைபெற உள்ளது. சிட்னியில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெற உள்ள சர்வதேச தொடர் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று 15 நாட்கள் குவாரன்டைனில் இருந்து பயிற்சிகளையும் மேற்கொண்டு நாளைய போட்டியை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் தான், இந்திய அணி கேப்டன் விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் பாராட்டியுள்ளார். இருவரும் ஐபிஎல் போட்டிகளின் போது பெங்களூரு அணிக்காக ஆடியுள்ளனர். இருவருக்கும் இடையே நல்ல நட்பும் உள்ளது. இப்போது இருவரும் வேறு வேறு அணிகளுக்கு கேப்டனாக நாளைய போட்டியை எதிர்கொள்ள உள்ளனர். விராட் கோலி குறித்து ஒரு இணையதள பக்கத்திற்கு கொடுத்த பேட்டியில் பின்ச் கோலியின் சாதனைகளை புகழ்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நீங்கள் கோலியின் சாதனைகளை பார்த்தால் அதில் இரண்டாம் பட்சம் என்பதே கிடையாது. இது உண்மையிலேயே குறிப்பிடத்தகுந்த ஒன்று. போட்டியின் போது விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதை மட்டுமே நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஒரு நாள் போட்டிகளில் கோலியின் சராசரி 60 ஆக உள்ளது. அதுவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் அவருடைய சராசரி 50 ஆகும். அவர் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர் என்றும், இதை எங்களுடைய திட்டங்களில் நிலை நிறுத்தி விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வகை செய்வோம் என்றும் பின்ச் கூறினார். மேலும் ஆஸ்திரேலிய அணி குறித்து கூறும் பொழுது, மர்கஸ் ஸ்டோய்னிஸ், மற்றும் மேக்ஸ்வெல்லின் பந்துவீச்சையும் பாராட்டினார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நாளைய போட்டிக்கு சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டோய்னிஸ் இரண்டு பேரையும் பயன்படுத்தினால், ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோரின் நான்கு முனை பந்துவீச்சு தாக்குதலை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்திய அணியில் ஏற்கனவே ரோஹித் சர்மா இடம்பெறாத நிலையில் நாளைய போட்டியில் ஓப்பனிங் இறங்க போவது யார்? இந்திய அணி எப்படி எதிர்கொள்ள இருக்கிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.