மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான ராம அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ராமபிரான் பூமியில் அவதரித்தை நாளையே நாம் ராமநவமி என்று கொண்டாடி வருகிறோம். தசரதன் – கோசலைக்கு மகனாக பிறந்த ராமர் நவமியில் ஏன் பிறந்தார்? என்று சிந்தித்து உண்டா?
பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் சென்று தங்களது நிலையை கூறி முறையிட்டன.
விஷ்ணுபகவான் அஷ்டமிக்கு, நவமிக்கும் ஆறுதல் அளித்தார். உங்கள் இருவரையும் போற்றக்கூடிய நாள் வரும், அதுவரை நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். மகாவிஷ்ணு அவர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அஷ்டமி திதி தினத்தில் கிருஷ்ண அவதாரத்தையும், நவமி திதி தினத்தில் ராம அவதாரத்தையும் எடுத்தார்.
இதன் அடிப்படையில் அனைவரும் கோகுலாஷ்டமியை அதாவது கிருஷ்ண ஜெயந்தியை அஷ்டமியிலும். ராம அவதாரம் எடுத்த நாளான நவமியை ராம நவமி என்றும் கொண்டாடுகிறோம்.
சீதாராமன் வசிஷ்ட முனிவரிடம் வித்தைகளை கற்றுத் தேர்ந்தவர். ராம பானத்திற்கு இணை வேறு ஏதும் இல்லை. ராமர் வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர். இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும்? என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ராமபிரான். அவரது புகழை போற்றும் விதமாக தமிழில் கம்பர் கம்பராமாயணத்தை எழுதியுள்ளார்.