Monday, May 29, 2023
HomeSpiritualதிருப்பதி ஆலயம் உருவான வரலாறு தெரியுமா..? பக்தர்கள் கோடிக்கணக்கில் ஏன் காணிக்கை செலுத்துகின்றனர்..?

திருப்பதி ஆலயம் உருவான வரலாறு தெரியுமா..? பக்தர்கள் கோடிக்கணக்கில் ஏன் காணிக்கை செலுத்துகின்றனர்..?

உலகப்புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார கோயிலாக உள்ளது. இந்த தலம் உருவானதன் பின்னணியும், ஏன் பக்தர்கள் இங்கு கோடிக்கணக்கில் காணிக்கையை கொட்டுகின்றனர் என்பதும் உங்களுக்கு தெரியுமா?

ஸ்ரீனிவாஸ் – பத்மாவதி அவதாரம்

தான் வசிக்கும் கணவரின் திருமார்பில் எட்டி உதைத்த பிருகு முனிவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபத்தில் லட்சுமி, சொர்க்கத்திலிருந்து கணவரைப் பிரிந்து பூலோகம் வந்தாள். மனைவியை பின்தொடர்ந்து பூலோகம் வந்த விஷ்ணு பகவான், அவரின் கோபம் தணியும் வரை, அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தார். பூலோகத்தில் ஒரு மலையரசனின் மகளாக பத்மாவதி என்ற பெயரில் லட்சுமி தேவியும், ஸ்ரீனிவாஸ் என்ற பெயரில் விஷ்ணு பகவானும் மறு அவதாரமெடுத்தனர்.

பத்மாவதியை திருமணம் செய்ய ஸ்ரீனிவாஸ் விருப்பம் தெரிவிக்க, அதற்கு பத்மாவதியின் தகப்பனார், ‘பணமில்லாத உன்னை போன்ற ஆண்டிக்கு பெண் தர மாட்டேன்; அவளை திருமணம் செய்ய வேண்டுமானால் எனக்கு வரதட்சணை தர வேண்டும்.” என்று நிபந்தனை விதித்தார். இதனால், செல்வக் கடவுளான குபேரனிடம் பெருமளவில் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி ஸ்ரீனிவாஸுக்கு இருக்கவில்லை. இதையடுத்து, குபேரன் வாக்களித்தபடி, ஸ்ரீனிவாஸுக்கு தங்க மலைகள் கொடுக்கப்பட்டன.

திரும்பிச் செல்லாத பெருமான்

கலியுகத்தின் முடிவில் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதாக குபேரனிடம் ஸ்ரீனிவாஸ் வாக்களித்திருந்தார். இதுநாள் வரையில் அந்த வரதட்சணையே உச்சபட்சமானது என்பதால், ஸ்ரீனிவாஸ் என்கிற வெங்கடேச பெருமாளின் பணப்பெட்டகத்தை நிரப்புவதற்கு அவரது பக்தர்கள் தொடர்ந்து காணிக்கை செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் இந்த பரோபகாரத்திற்கு பிரதியுபகாரமாக, பக்தர்களின் செல்வத்தை மேலும் பெருக்கவோ அல்லது செல்வத்தின் மீதான பற்றை விலக்கவோ அருள்புரிகின்றார்.

எனவே பக்தர்கள் விஷ்ணுவிற்கு செல்வத்தை வாரி வழங்க, அவரும் பக்தர்களை பணக்காரர்களாக்குகிறார். இந்தச் சுழற்சி தொடர்ந்து நடைபெற்று இந்தியாவில் பணக்கார இந்து கோவிலாக திருப்பதியை உருவாக்கியுள்ளது. இந்த அளவிற்கு பக்தர்களிடமிருந்து காணிக்கைகள் குவிந்தாலும், குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்க விஷ்ணு பகவானால் திருப்பித் தர முடியவில்லை. இதனால், வைகுண்டத்திற்குத் திரும்பிச் செல்ல முடியாமல், நிரந்தரமாய் பூமியிலேயே சிக்கிக்கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.