Monday, May 29, 2023
HomeSpiritualதிருமணத் தடை நீங்கனுமா..? பெரம்பலூர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு போங்க..!

திருமணத் தடை நீங்கனுமா..? பெரம்பலூர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு போங்க..!

மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ளதால் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. பக்தர்களும் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்றின் பெருமைகளை கீழே காணலாம்.

அருள்தரும் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் என்னும் ஊரில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பெரம்பலூரில் இருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் செட்டிகுளம் எனும் ஊர் உள்ளது. செட்டிகுளத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இக்கோயிலில் பங்குனி மாதத்தில், மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் சூரிய ஒளி மூலவரான ஏகாம்பரேஸ்வரர் மீது நேரடியாக விழுகின்றது. மூலவருக்கு இடப்புறத்தில் தனிச்சன்னதியில் காமாட்சியம்மன் காட்சி அளிக்கிறாள். இவளது சன்னதி கோஷ்டத்தில் மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

சிறப்பம்சங்கள்:

மேற்கு பிரகாரத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் அருகில் வள்ளி, தெய்வானையுடன் வேல்வடிவ திருவாச்சியோடு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். உட்பிரகார மண்டபம் 10 தூண்களை கொண்டு மிக அழகாக அமைந்துள்ளது. இந்த தூண்களை காய்ந்த சந்தன குச்சியைக் கொண்டு தட்டினால் 10 தூணிலிருந்தும், 10 வகையான இசை ஒலிகள் எழும்புவது மிகவும் சிறப்பம்சமாகும்.
உட்பிரகார மண்டபத்தின் கன்னி மூலையில் வரகுணகணபதி, அருகில் ஐந்து தலை நாகருடன் காட்சி தருகிறார். இத்தல குபேர பகவான் தனது வாகனமான மீன் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இந்த குபேர சிற்பம் மிகவும் அரியதாக கருதப்படுகிறது. இந்த அரிய சிற்பமான குபேரர், இக்கோயிலில் 12 ராசிகளுக்கும் உரியதாக, 12 இடங்களில் காட்சி தருகிறார்.

விழாக்கோலம்:

மூலவரான சிவன் ஜோதி லிங்கமாக காட்சி தரும் இக்கோயிலில், 12 ராசிகளுக்குரிய குபேரர்களையும் தரிசிப்பது மிகவும் சிறப்பம்சமாகும். ஸ்தபன மண்டபத்தின் வடபுற தூணின் பின்புறம் துவாரபாலகரின் அருகே செதுக்கப்பட்டுள்ள ஒரு சிற்பத்தில், ஒரே தலையைக் கொண்டு எதிர் எதிராக யானை உருவமும், காளை உருவமுமாக தோற்றமளிக்கும் வித்தியாசமான அற்புத சிற்பம் அமைந்துள்ளது.
தைப்பூசத் திருவிழா மிகவும் விமர்சையாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஆடிபூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சூரசம்ஹாரம், பிரம்மோற்சவம், திருக்கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி, பிரதோஷம், தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

ALSO READ | பழனி பஞ்சாமிர்தத்தில் இத்தனை மருத்துவ குணங்களா..?

திருமணத் தடைகள் நீங்கும்:

இந்த ஆலயத்தில் வழிபட்டால் திருமணத்தடை மற்றும் புத்திர தோஷம் நீங்கவும், நோய்கள், வழக்கு சிக்கல்கள், வியாபார சிக்கல்கள் ஆகியவை நீங்கவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், அம்பாளுக்கு சேலை சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மேலும் பால், தயிர், எலுமிச்சை, சந்தனம், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.