Tuesday, May 23, 2023
HomeSpiritualசங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன..? வழிபாடுகளும், பலன்களும் என்ன?

சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன..? வழிபாடுகளும், பலன்களும் என்ன?

Sangadahara Sathurthi:அனைத்திற்கும் முதல் கடவுள் விநாயகப்பெருமான். அவருக்கு மிகவும் உகந்த நாள் சங்கடஹர சதுர்த்தி ஆகும். விநாயகர் என்ற சொல்லுக்கு தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகப் பெருமான் எந்தளவு எளிமையாக உள்ளாரோ, அந்தளவு சக்திவாய்ந்த கடவுளாகவும் உள்ளார்.

சங்கடஹர சதுர்த்தி:

சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம் ஆகும். சங்கடஹர சதுர்த்தி விரதத்தை பற்றி கீழே காணலாம்.

சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாக “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும்.
மனித வாழ்வில் கஷ்டங்கள் சேருவதே சங்கஷ்டம் என்ற சொல்லாக குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு “சங்கட”மாக மாறிவிட்டது. மக்களின் சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாக கடைபிடிக்கப்படுகிறது.
நமக்கு வரும் துன்பங்கள், தடைகள், கஷ்டங்கள் ஆகியவற்றை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் சங்கடஹர சதுர்த்தி ஆகும். தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்தபோது, அவர்கள் விநாயகரை வணங்கி நலம் பெற்றுள்ளனர்.

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு:

  • சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் பொதுவாக விரதம் இருக்கும் நாளில் செய்வது போல, காலை எழுந்ததும் வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
  • பின் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விநாயகரை வணங்கி 11 முறை வலம்வர வேண்டும்.
  • விநாயகருக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் அவசியம்.
  • நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம்.
  •  மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும்.
  • விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.
  • நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
  • விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.

பலன்கள் :

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து பூஜை மற்றும் வழிபாடு செய்தால் ஒரு வருடம் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்போர் இந்த விரதம் இருந்தால் திருமணம் நடக்கும். இந்த நாளில் விநாயகப்பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ALSO READ | ஆண்களே… உங்களுக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கு..? அதோட பலன்கள் என்ன தெரியுமா..?