ஸ்ரீசாயிநாதர் ஓர் அவதார புருஷர் என்பது அவருடயை குருநாதர் வெங்கூசாவுக்குப் பிறகு அறிந்துகொள்ளும் பாக்கியம், செங்கல்லை எறிந்து சாயிபாபாவை கொலை செய்யத் துணிந்த பாதகர்களுக்கே கிடைத்தது. இத்தனை நாட்கள் இருந்த தங்களுக்கு கிடைக்காத முக்கியத்துவம், திடீரென வந்த சாயிநாதருக்கு கிடைக்கிறதே என்ற பொறாமை கொண்டனர் சில சீடர்கள்.
அவர்களில் இளைஞனாக இருந்த சாயிநாதரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்ட கொலை செய்ய முயற்சியும் மேற்கொண்டனர். அப்படி இரண்டு முறை செங்கல்லை வீசி சாயிநாதரைக் கொல்ல நினைத்தவனுக்கும், அவனுடன் இருந்தவர்களுக்கும்தான் சாயிநாதர் அருளை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
வெங்கூசா முதல் செங்கல்லை அந்தரத்திலேயே நிறுத்திவிட்டதையும், இரண்டாவது செங்கல் அவருடைய நெற்றியில் பட்டு ரத்தக்காயம் ஏற்படுத்தியதையும் கண்டு திகைத்துப் போனான்.
தொடர்ந்து, மலட்டு மாட்டில் இருந்து பால் கறந்து, அதை இளைஞன் சாயிநாதரின் கைகளில் பொழிந்து, அதுவரை தாம் பெற்றிருந்த அனைத்து சக்திகளையும் அந்த இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததையும் கண்டதுமே அவனுக்கு அளவுக்கு அதிகமான பயம் ஏற்பட்டு, அந்த இடத்திலே மயங்கி விழுந்து உயிரிழந்தான்.
சாயிநாதரை கொல்ல நினைத்தவர்கள் வெங்கூசாவின் கால்களில் விழுந்து செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார்கள். மேலும், அவரை கொல்ல நினைத்துச் செங்கல்லை எறிந்தவன் இறந்துபோனதையும் அவருக்குத் தெரிவித்து, அவனை மன்னித்து, எப்படியாவது பிழைக்கச் செய்ய வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொண்டனர்.
ஆனால் வெங்கூசாவோ, ‘‘இனி என்னிடம் எந்தச் சக்தியும் இல்லை. இதுவரை நான் பெற்றிருந்த அத்தனை சக்திகளையும் இந்த இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். உங்களுடைய பிரார்த்தனையை இனி இந்த இளைஞன்தான் நிறைவேற்ற வேண்டும்” என்று சொல்லிவிட்டார்.
அவர்கள் சாயிநாதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இறந்தவனைப் பிழைக்கச் செய்யவேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். சாயிநாதரும் அவனைப் பிழைப்பிக்கச் செய்ய திருவுள்ளம் கொண்டார். ஆனாலும், தம் குருநாதரின் சம்மதம் வேண்டி அவரைப் பார்க்க, அவரும் கண்களாலேயே சம்மதம் தெரிவித்தார். உடனே, தான் வைத்திருந்த கமண்டலத்தில் இருந்த பாலை, இறந்துபோனவனின் வாயில் கொஞ்சம் ஊற்றினார் சாயிநாதர். உடனே, இறந்துகிடந்தவன் தூக்கத்தில் இருந்து விழித்தெழுபவன்போல் பிழைத்து எழுந்து உட்கார்ந்தான். தான் கொல்ல நினைத்த இளைஞனாக இருந்த சாயிநாதரே தன்னைப் பிழைக்கச் செய்தது கண்டு வெட்கித் தலைகுனிந்தவனாக சாயிநாதர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.
சாயிநாதரின் குருநாதர் வெங்கூசா அந்த இளைஞர்களிடம், ‘‘என்னிடம் இத்தனை காலம் இருந்தும் நீங்கள் கற்றுக்கொண்டது பொறாமையும் வஞ்சகமும்தானா? உங்களின் செயல் என்னை மிகவும் வருத்துகிறது. இனியாவது நல்லவர்களாக நடந்துகொள்ளப் பாருங்கள்” என்று அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிவிட்டு, சாயிநாதரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.