Wednesday, May 31, 2023
HomeSpiritualமுருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா.. பழனியில் இன்று கும்பாபிஷேகம்..! பக்தர்கள் பரவசம்..!

முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா.. பழனியில் இன்று கும்பாபிஷேகம்..! பக்தர்கள் பரவசம்..!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி. அறுபடை வீடுகளில் மூன்றாவதும் முக்கியமான வீடாகியது பழனி. பழனி முருகனை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று வருவது வழக்கம்.

கும்பாபிஷேகம்:

புகழ்பெற்ற பழனி முருகன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. பழனியில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால், கடந்த 2018ம் ஆண்டு சில காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், பக்தர்களில் பலத்த எதிர்பார்ப்புக்கும், பரவசத்திற்கும் மத்தியில் இன்று பழனியில் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்காக களைகட்டியுள்ள பழனியில் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யாகசாலை பூஜை காலை 4.30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மங்கல ஓசை இசைக்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்

காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேக லக்ன கொடை அளித்தல் நடக்கிறது. பின்னர், காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் சக்தி கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

இதைத்தொடர்ந்து மங்கல இசை முழங்க, அரோகரா கரோகஷம் விண்ணைப் பிளக்க பழனி தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம், தங்க விமானத்தில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
சரியாக 8.45 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.15 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. மதியம் 12.5 மணிக்கு அன்னப்படையல், தீபாராதனை. திருமறை, சிவ ஆகமம், கட்டியம், கந்தபுராணம், திருமுறை விண்ணப்பம் பாடப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு

பழனி கும்பாபிஷேக பணியில் 2 ஐ.ஜி.க்கள், 2 டி.ஐ.ஜி.க்கள், 7 எஸ்.பி.க்கள், 14 கூடுதல் சூப்பிரண்டுகள், 25 டி.எஸ்.பி.க்கள் உள்பட 2500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள், கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.