உலகப்புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் குடமுழுக்கு விழா என்பதால் பக்தர்கள் மிகுந்த பரவசம் அடைந்துள்ளனர். பழனி மலை முருகனை தரிசிப்பதற்காக உலகெங்கில் பல நாடுகளில் இருந்தும் முருக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ஆயிரம் அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்துள்ளது. புகழ்பெற்ற பழனி மலையில் மட்டுமே முருகப்பெருமான் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில், இங்கு ஆண்டிக்கோலத்தில் காட்சி தருகிறார்.
ஆண்டி கோலத்தில் காட்சி தருவது ஏன்?
இந்த பழனி மலை முருகன் ஆண்டியாக தோற்றமளிக்க காரணம் புராணங்களின் படி ஞானப்பழத்தை சிவன், பார்வதியிடமிருந்து தனது மூத்த சகோதரன் விநாயகன் பெற்றுக்கொண்டதால் கோபித்து கொண்டு இந்த மலையில் வந்து தங்கி விட்டார் முருகப்பெருமான்.
தந்தை சிவபெருமானும் தாய் பார்வதியும் எவ்வளவோ கெஞ்சி சமாதானப்படுத்தியும், இந்த பழனி மலையிலேயே தங்க போவதாக உறுதியாக கூறிவிட்டார் முருகன். அப்போது, அனைத்தையும் துறந்து ஆண்டிக்கோலத்திற்கு மாறிவிட்டார். பிற்காலத்தில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு முருகன் காட்சி தந்த போது நீயே ஞானவடிவானவன் என்ற பொருள் கொண்ட “பழம் நீ” என்று அவ்வை போற்றினார். இதுவே காலப்போக்கில் இத்தலத்திற்கு “பழனி” என்ற பெயர் வர காரணமாயிற்று.
முருகப்பெருமானின் ஆண்டிக்கோலம் நமக்கு உணர்த்துவது கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர் எப்படி கையில் கொம்பை வைத்துக்கொண்டு மாணவர்களை அடிக்காமல், அவர்களை அதட்டி கல்வியை கற்பிக்கிறாரோ அது போல் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையாமையை நினைவுறுத்தி, மக்களை ஞானப்பாதைக்கு திருப்பும் ஞானாசிரியனாக இத்தலத்தில் கையில் தண்டத்துடன் காட்சியளித்து தண்டாயுதபாணியாக இருக்கிறார்.
கிரிவலம்:
திருவண்ணாமலை அருணாச்சல மலையை மக்கள் சித்ராபவுர்ணமி அன்று எவ்வாறு கிரிவலம் வருகின்றனரோ அதுபோல் அக்னி நட்சத்திர நாளில் பக்தர்கள் இப்பழனி மலையை கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரமா உள்ள மலையை 690 படிகள் எறிகடந்து வர வேண்டும். நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது.
போகமுனிவர்
இந்த நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்ய பயன்படும் சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றை பிரசாதமாக பெற்று சாப்பிடும் பக்தர்களின் எப்படிப்பட்ட உடல் நோய்களையும் தீர்க்கும் தெய்வீக சக்தி கொண்டது. இந்த பழனி மலையிலேயே போகர் சித்தரின் சமாதி மற்றும் போகர் சித்தரின் தனி சந்நிதி இருக்கிறது.