புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. பழனி முழுவதும் பக்தர்களின் அரோகரா கரகோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியின் வரலாற்றை நாம் கீழே காணலாம்.
தல வரலாறு
புராண காலங்களில் இந்த ஊர் திரு ஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி மற்றும் குழந்தை வேலாயுதர் என அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் சிறப்பான அம்சமே பக்தர்களுக்கு நன்மைகளை செய்யும் சக்தி கொண்ட சித்தர்களின் ரசவாத கலையை பயன்படுத்தி நவபாஷணத்தில் செய்யபட்ட முருகனின் சிலையை போகர் சித்தர் உருவாக்கி அதை நாம் வழிபடுவதுதான்.
புராணங்களின் படி ஞானப்பழத்தை சிவன், பார்வதியிடமிருந்து தனது மூத்த சகோதரன் விநாயகன் பெற்றுக்கொண்டதால் கோபித்து கொண்டு இந்த மலையில் வந்து தங்கி விட்டார் முருகப்பெருமான். தந்தை சிவபெருமானும் தாய் பார்வதியும் எவ்வளவோ கெஞ்சி சமாதானப்படுத்தியும், இந்த பழனி மலையிலேயே தங்க போவதாக உறுதியாக கூறிவிட்டார் முருகன். பிற்காலத்தில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு முருகன் காட்சி தந்த போது “நீயே ஞானவடிவானவன்” என்ற பொருள் கொண்ட பழம் நீ என்று அவ்வை போற்றினார். இதுவே காலப்போக்கில் இத்தலத்திற்கு “பழனி”என்ற பெயர் வருவதற்கு காரணமானது.
நவபாஷண சிலை
தமிழ் சித்தர்களில் முதன்மையானவர்களில் “போகர்”சித்தரும் ஒருவர். அஷ்டம சித்திகளையும் கைவரப்பெற்றவராவார். இந்த பழனி மலைக்கு போகர் தவம் புரிய வந்த போது, பார்வதி தேவி, முருகன் மற்றும் சித்தர்களில் தலையாய சித்தரான “அகத்தியர்”ஆகிய மூவரின் உத்தரவு பெயரில் பழனி மலை முருகனுக்கு “நவபாஷாண சிலை”வடிக்கும் பணியை மேற்கொண்டார் போக சித்தர்.
இந்த நவபாஷண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். “4000” திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலையை செய்ய பயன்படுத்தப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர்.