தமிழ் சித்தர்களில் முதன்மையானவர்களில் போகர் சித்தர். அஷ்டம சித்திகளையும் கைவரப்பெற்றவராவார். இந்த பழனி மலைக்கு போகர் தவம் புரிய வந்த போது, பார்வதி தேவி, முருகன் மற்றும் சித்தர்களில் தலையாய சித்தரான அகத்தியர் ஆகிய மூவரின் உத்தரவு பெயரில் பழனி மலை முருகனுக்கு நவபாஷாண சிலை வடிக்கும் பணியை மேற்கொண்டார் போக சித்தர்.
இந்த நவபாஷண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் 9 ஆண்டுகளாகும். 4000 திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலை செய்யப்பட்டுள்ளது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷண சிலை செய்யும் பணியில் உதவினர்.
உடல் ஆரோக்கியம்
மிக அற்புதமான இந்த நவபாஷாண சிலையை மக்களின் நன்மைக்காக இறைவனின் உத்தரவின் பேரில் போகமுனிவர் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நவபாஷண சிலைக்கு அபிஷேகம் செய்ய பயன்படும் சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றை பிரசாதமாக பெற்று சாப்பிடும் பக்தர்களின் எப்படிப்பட்ட உடல் நோய்களையும் தீர்க்கும் தெய்வீக சக்தி கொண்டது. இந்த பழனி மலையிலேயே போகர் சித்தரின் சமாதி மற்றும் போகர் சித்தரின் தனி சந்நிதி இருக்கிறது.
இங்கிருக்கும் முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. “திருப்புகழ்எனும் முருகனை போற்றி பாடல் தொகுப்பை இயற்றிய அருணகிரிநாதர் தான் கிளி வடிவில் முருகனுடன் இருக்கும் பேறு பெற்றிருக்கிறார் என்பது ஐதீகம். பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சன்னதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே, மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுதுகிறது.
நான்கு பொருட்களில் மட்டுமே அபிஷேகம்:
இங்கிருக்கும் முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெய், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி என்ற நான்கு பொருட்களை கொண்டு தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. பன்னீர் அபிஷேகம் மார்கழி மாதத்தில் மட்டும் செய்யப்படுகிறது. சந்தனம், பன்னீர் தவிர்த்து மீதி அபிஷேக பொருட்கள் எல்லாம் முருகன் விக்கிரகத்தின் தலையில் வைத்து எடுத்துவிடுகின்றனர். முருகன் சிலை மீது வைத்து எடுக்கப்படும் சிரசு விபூதி சித்தர்களின் உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரிதான பிரசாதமாகும்.
பொதுவாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால் பழனி முருகன் கோவிலில் விஷேஷ நட்சத்திர தினங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
ஒரு நாளில் ஆறு முறை முருகனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. ஒரு முறை அபிஷேகம் செய்து அலங்காரம் செய்த பின்பு பூக்கள் அர்ச்சனை, மாலை சாற்றுவது போன்ற எதுவும் செய்யப்படுவதில்லை. திருப்பதி கோவிலின் பிரசாதமாக லட்டு எவ்வாறு புகழ் பெற்றுள்ளதோ, அதுபோல் பழனி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பழனி பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது.
இக்கோவிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கும் நோய்கள் நீங்குகிறது என்பது அனுபவம் பெற்றவர்களின் உறுதியான வாக்கு. மேற்குத்திசையில் இருக்கும் கேரள மாநிலத்தை பார்த்தவாறு தண்டாயுதபாணி இந்த கோவிலில் வீற்றிருப்பதால், மலையாள பக்தர்கள் மிக அதிகளவில் பழனி முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.