Saturday, May 27, 2023
HomeSpiritualதிருமண வரம் தரும் எட்டுக்குடி வேலவன் ஆலயத்தில் என்னவெல்லாம் சிறப்பு..?

திருமண வரம் தரும் எட்டுக்குடி வேலவன் ஆலயத்தில் என்னவெல்லாம் சிறப்பு..?

Ettukudi Murugan Temple: தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் புகழ்போற்ற ஏராளமான வரலாறுகளும், அவரது அருள் வரலாறு சொல்ல ஏராளமான பெயர்களும் உண்டு. அவ்வாறு முருகப்பெருமானின் பெயர்களில் ஒன்று எட்டுக்குடி வேலவன். அப்பேற்பட்ட எட்டுக்குடி வேலவன் திருக்கோயில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாகப்பட்டினம்(Nagapattinam) மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி என்ற ஊரில் அமைந்துள்ளதே அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில் ஆகும். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டுக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ சென்றால் இந்த ஆலயத்திற்கு செல்லலாம்.

சிறப்புகள்:

  • இந்த எட்டுக்குடி முருகன் கோயிலின் சிறப்பு என்னவென்றால் பக்தர்கள் பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி.
  • குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும் காட்சி தருகிறார்.
  • எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும், கௌரி விரதத்தையும் ஒன்றாக கடைபிடிப்பது சிறப்பு.
  • தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கௌரி விரதம் தோன்றிய தலம் இதுதான்.
  • இங்குள்ள முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து காட்சி தருகிறார்.

வேறென்ன சிறப்பு?

அனைத்து முருகன் கோயில்களிலும் இருப்பது போல் எட்டுக்குடி முருகன் கோயிலுக்கு காவடி எடுப்பது தனிச்சிறப்பு. முருகனுக்கு உகந்த நாளான நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுப்பார்கள். எட்டுக்குடி கோயிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.
இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் அவரின் கோபத்தை தணிக்கும் வகையில் தினந்தோறும் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. இக்கோயிலின் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைபட்டாலே பாவம் நிவர்த்தியாகிவிடும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்:

  • எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடக்கும்.
  • பௌர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலாபிஷேகம் துவங்கும். இவ்விழாவில் குறைந்தபட்சம் 23 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும்.
  • ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களும், வைகாசி விசாகம் ஒரு நாளும் நடத்தப்படும்.
  • எட்டுக்குடி வேலவன் கோயிலின் உள்ளே உள்ள அம்மையப்பனுக்கு மார்கழி திருவாதிரையில் விழா எடுக்கப்படும். இது தவிர மாத கார்த்திகையில் சிறப்பு பூஜை உண்டு. இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

எட்டுக்குடி வேலவனை வந்து வழிபட்டால் குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். எட்டுக்குடி வேலவன் ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு முருகப்பெருமான் அருள்பெறுங்கள்.

ALSO READ | ஜெயிச்சுட்ட மாறா..! விடுதலை எனும் முழக்கத்தால் வெற்றி பெற்ற வெற்றிமாறன்..!