Monday, May 29, 2023
HomeSpiritualசதுர்த்தி, கிருத்திகை விரதம் இருப்பது எப்படி? பலன்கள் என்னென்ன?

சதுர்த்தி, கிருத்திகை விரதம் இருப்பது எப்படி? பலன்கள் என்னென்ன?

அனைத்திற்கும் முதலாம் ஆதிசிவனின் மகன் விநாயகப் பெருமானை வணங்கியே எந்தவொரு காரியத்தையும் செய்கிறோம். அதேபோல, தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அருளால் தடைகளை கடக்கிறோம். அண்ணன் தம்பிகளான விநாயகருக்கு சதுர்த்தியும், முருகனுக்கு கிருத்திகையும் உகந்த நாள் ஆகும்.
அந்த நாட்களில் எவ்வாறு விரதம் இருப்பது என்று தெரியுமா? கீழே விரிவாக காணலாம்.

கிருத்திகை விரதம்

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொண்டால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முருகனின் அருளாற்றல் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்களை சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபடவும்.
கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்தும் முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்தும் வணங்க வேண்டும்.

சதுர்த்தி விரதம்

சதுர்த்தியன்று அதிகாலை நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். முழுநேரமும் விரதம் இருக்க முடியாதாவர்கள் பால் மற்றும் பழத்தை சாப்பிடலாம். சதுர்த்தியன்று மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.
சதுர்த்தியன்று ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து விரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

பலன்கள்

சதுர்த்தியிலும், கிருத்திகையிலும் முறையே விநாயக பெருமான் மற்றும் முருகரை வழிபடுவதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்கும். கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். சேமிப்பு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இருக்கும் மந்த புத்தி நீங்கி, அறிவுக்கூர்மை உண்டாகி கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.

ALSO READ | பெண்களின் வாழ்வில் குருபெயர்ச்சி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஒவ்வொரு ராசிக்கும் எப்படி?