பீஜிங்: 2027 ஆம் ஆண்டிற்குள் சீனாவின் மக்கள் விடுதலை ணுவத்தை, அமெரிக்க ராணுவத்துக்கு இணையானதாக மாற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் புதிய திட்டங்களை வகுத்து கொடுத்திருக்கிறார். மேலும் ராணுவத்தில் பெரிய அளவு நவீனத்தை புகுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
சீனா தன்னை உலகின் ஆசைக்கு முடியாத சக்தியாக மாற்ற எல்லா வேலைகளையும் செய்துகொண்டு வருகிறது. ஒரு பக்கம் இப்படியான வேலைகளை செய்துகொண்டு வந்தாலும் மறுபக்கம் இந்தியாவுடன் லடாக் எல்லையிலும், தைவானுடன் நில பிரச்சனையிலும், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் தென்சீன கடல் எல்லை பிரச்சனைகளிலும் முட்டி மோதிக்கொண்டு உள்ளது. இதனால் உலகின் பெரும்பாலான பல நாடுகளும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன. அவற்றை எதிர்கொள்ள இப்போது ராணுவத்தை பலப்படுத்த தொடங்கியுள்ளது.
67 வயதாகும் ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராகவும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் இருக்கும் இவர் அந்நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த நபராக இருக்கிறார். இந்த நிலையில் தான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஜி ஜின்பிங், புதிய சகாப்தத்திற்கான இராணுவத்தையும், இராணுவ திட்டத்தையும் பலப்படுத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனையை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார் என்று அரசு ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
மற்ற முன்னணி சக்திகளுக்கு இணையாக தன்னை ஒரு நவீன போர்திறன் கொண்ட நாடாக மாற்ற விரும்பினால், PLA ராணுவம் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் கூறினார். புதிய வகை இராணுவ பயிற்சி முறையை விரைவாக ஆரம்பிப்பதற்கும், புதிய சகாப்தத்திற்கு வலுவான ஆயுதப்படைகளை உருவாக்கவும் வேண்டும். ஆயுதப்படையை உலகத்தரமாக மாற்ற வேண்டும் என்பதை கட்சியின் இலக்காக கொண்டிருக்க வேண்டும். இராணுவ பயிற்சி என்பது இராணுவத்தின் வழக்கமான பணிகளின் போதே நடைபெற வேண்டும், ஏனெனில் அதன் போர் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் இதுவாகும் என்று கூறினார்.
சீனா இந்த ஆண்டு சுமார் 179 பில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது, இது அமெரிக்காவுக்கு பிறகு உலகில் இரண்டாவதாக பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்படும் செலவாகும். அமெரிக்கா 732 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்குகிறது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் சீனாவின் பாதுகாப்பு செலவு 232 பில்லியன் டாலராக இருந்தது. 2027 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவுக்கு இணையான ராணுவமாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தை மாற்ற வேண்டும் என்றும் கூட்டத்தில் திட்டத்தை உறுதி செய்தனர்.