மகளிர் ஐ.பி.எல்.(WPL) தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஐ.பி.எல். போட்டிகளை காட்டிலும் மகளிர் ஐ.பி.எல்.லில் வீராங்கனைகள் தூள் கிளப்பி வருகின்றனர். இதனால், நாளுக்கு நாள் மகளிர் ஐ.பி.எல்.கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆண்கள் ஐ.பி.எல். தொடரில் எப்படி மும்பை அணி ராஜநடை போடுகிறதோ? அதேபோல மகளிர் ஐ.பி.எல்.லிலும் மும்பை அணி இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டது என்றே கூறலாம். ஆண்கள் ஐ.பி.எல். போலவே பெண்கள் ஐ.பி.எல். தொடரிலும் பரிதாப நிலைக்கு ஆளாகியிருப்பது பெங்களூர் அணிதான்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக கோப்பையை வெல்லும் அணிகளில் மும்பை அணிக்கு சவால் தரும் அணியாக கருதப்பட்டது பெங்களூர் அணி. எப்படி ஆண்கள் ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கு விராட்கோலி இருக்கிறாரோ, அதேபோல பெண்கள் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ஸ்மிரிதி மந்தனா கருதப்பட்டார். குறிப்பாக, முதல் சீசனுக்கான வீராங்கனைகளிலே அதிக தொகை அளிக்கப்பட்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா.
இந்திய அணிக்காக பல நெருக்கடியான நேரங்களில் அசத்திய ஸ்மிரிதி மந்தனா கேப்டனாகவும் களமிறங்கினார். மந்தனா தலைமையில் களமிறங்கிய பெங்களூர் அணியில் திறமைக்கும் ஒன்றும் பஞ்சமில்லை. அதிரடி வீராங்கனை எல்லீஸ் பெர்ரி, டிவைன், ரிச்சா கோஷ், ஹீதர் நைட், திஷா என்று பேட்டிங்கில் கலக்க ஒரு பட்டாளமே இருந்தது. பந்துவீச்சில் ஷிகா பாண்டே, ஜெஸ், ஆலிஸ், மாரிஜானே உள்ளனர்.
கம்பீரமாக களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்து தோல்விகள் மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது. ஆண்கள் ஐ.பி.எல். தொடரில் பெரும்பாலான சீசன்களில் பெங்களூர் அணி ஒன்று பேட்டிங்கில் பலமாக களமிறங்கும். இல்லாவிட்டால் பந்துவீச்சில் பலமாக களமிறங்கும். இரண்டிலும் சமபலத்துடன் இறங்குவது என்பது அரிதாகவே இருக்கும். அதுவே அவர்களது தோல்விக்கும் காரணமாக அமைந்துவிடும்.
அந்த கதைதான் தற்போது மகளிர் ஆர்.சி.பி. அணிக்கும் நடந்து கொண்டிருக்கிறது.
ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ள ஆர்.சி.பி. இனி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும். பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும். ஆர்.சி.பி. அணிக்கு எதிராக களமிறங்கிய அத்தனை அணிகளும் பேட்டிங்கில் விளாசிவிட்டனர். கேப்டன்சி அழுத்தத்தால் மந்தனாவின் பேட்டிங் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது தேவையற்ற அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பெங்களூர் அணி தோல்வியை தழுவி வருவதால் சமூக வலைதளங்ளிலும் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆர்.சி.பி. அணி ஆளாகி வருகிறது.
ALSO READ | மகளிர் தினம்: கடற்பாசியை தேடி கடலில் இறங்கும் பெண்கள்…