மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ரிக்கிபாண்டிங் தலைமையில் உலக கிரிக்கெட் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆண்கள் ஆஸ்திரேலிய அணியைப் போல எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது.
உலகக்கோப்பை:
மிகவும் எதிர்பார்க்ப்பட்ட டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 157 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. உலகக்கோப்பை கனவுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வெற்றி அருகில் வந்து 19 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பையை நழுவவிட்டது.
2009ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை ஆஸ்திரேலிய அணி மட்டும் 6 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வரலாற்றை இன்னொரு அணி மாறுவதற்கான வாய்ப்பு ஏற்படவே இன்னும் 6 உலகக்கோப்பை போட்டித் தொடர் நடக்க வேண்டும். அந்தளவிற்கு ஆஸ்திரேலிய அணி வரலாற்றில் மாற்ற முடியாத அளவு சாதனையை செய்துள்ளது.
6 முறை சாம்பியன்:
இதுவரை நடைபெற்ற 8 உலகக்கோப்பை டி20 மகளிர் தொடரில் 7 முறை ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் 2 முறை ஹாட்ரிக் பட்டமும் அடங்கும். 2010ம் ஆண்டு முதன்முறையாக நியூசிலாந்தை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றிய ஆஸ்திரேலியா, 2012ம் ஆண்டு இங்கிலாந்து அணியையும், 2014ம் ஆண்டு இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி ஹாட்ரிக் உலகக்கோப்பையை கைப்பற்றிய அணி என்ற சாதனையை படைத்தது.
2016ம் ஆண்டும் உலகக்கோப்பை கனவுடன் வந்த ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. ஆனால், கோப்பையை தக்கவைக்கும் அவர்களின் கனவை வெஸ்ட் இண்டீஸ் அணி முறியடித்து புதிய சாம்பியனாக உருவெடுத்தது. ஆனால், அடுத்த உலகக்கோப்பை தொடரான 2018ம் ஆண்டே கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா இந்த முறை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
2 முறை ஹாட்ரிக்:
கடந்த உலகக்கோப்பையில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. இந்த முறை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தி மீண்டும் ஒரு உலகக்கோப்பை ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ஆண்கள் உலகக்கோப்பையில் கூட எந்த அணியும் இதுவரை 2 முறை ஹாட்ரிக்காக உலகக்கோப்பையை வென்ற வரலாறே கிடையாது. யாராலும் வீழ்த்த முடிாயத ஆஸ்திரேலிய அணி அடுத்த முறை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா? அல்லது புதிய வரலாற்றை வேறு அணி படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.