Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்28,000 இல்ல 32,000 பேர் வேலை இழக்க போறாங்க.. டிஸ்னியின் அறிவிப்பால் கலக்கத்தில் தொழிலாளர்கள்

28,000 இல்ல 32,000 பேர் வேலை இழக்க போறாங்க.. டிஸ்னியின் அறிவிப்பால் கலக்கத்தில் தொழிலாளர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்து வால்ட் டிஸ்னி நிறுவனம் ஏற்கனவே 28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கையை 32,000 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் என்றதும் உலகம் முழுவதும் பெரும்பாலும் தொற்றுநோய் குறித்த எண்ணங்கள் வருகிறதோ இல்லையோ நிச்சயம் வைரஸ் பாதிப்பால் போடப்பட்ட லக்டவுனும் அதனால் ஏற்பட்ட வேலையிழப்பும் நினைவில் வந்துவிடும். கொரோனவால் நேரடியாக ஏற்பட்ட இழப்பை விட இப்படி மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதும் ஏராளம். வைரஸ் பாதிப்பை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளால் பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உட்பட எதுவுமே செயல்படவில்லை. இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்தனர்.

அந்த வரிசையில் வால்ட் டிஸ்னி கார்ப்ரேஷன் நிறுவனமும் கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 28 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு நீக்க போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த எண்ணிக்கையை தற்போது 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அதன் டிஸ்னி லேண்ட் தீம் பார்க்குகளில் முதன்மையாக இந்த பணிநீக்கம் இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஏனெனில் கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக தீம் பார்க்குகளுக்கு மக்கள் செல்வது மொத்தமாக குறைந்து விட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிநீக்கங்கள் 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருக்கும் என்று அந்த நிறுவனம் பத்திரம் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. டிஸ்னியின் செய்தித் தொடர்பாளரும் பழைய எண்ணிக்கையான 28 ஆயிரத்துடன் தற்போது உயர்த்தப்பட்ட எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக இம்மாத தொடக்கத்தில் பூங்காக்களை மீண்டும் திறக்க அரசு எப்போது அனுமதிக்கும் என்பது தொடர்பாக நிச்சயமற்ற தன்மையால் டிஸ்னி நிறுவனம் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள அதன் தீம் பார்க்கில் இருந்து கூடுதல் தொழிலாளர்களை வெளியேற்ற போவதாக கூறியிருந்தது.

அதேசமயம் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் புளோரிடா அரசாங்கம் அனுமதி கொடுத்த காரணத்தினால் அந்த மாகாணத்தில் உள்ள டிஸ்னி தீம் பார்க் திறக்கப்பட்டது. இருப்பினும் சமூக இடைவெளி, சோதனை, கட்டாய மாஸ்க் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் மக்கள் வரவு முற்றிலும் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதேபோல பிரான்சில் திறக்கப்பட்ட டிஸ்னிலேண்ட் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை காரணமாக கொண்டுவரப்பட்ட புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகளால் மீண்டும் மூட வேண்டியதாகிவிட்டது. இப்படியான பல காரணங்களால் அந்த நிறுவனம் ஊழியர்களின் பணிநீக்கத்தை அதிகரித்துள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.