உஸ்பெகிஸ்தான் நாட்டில்19 குழந்தைகள் பலியான விவகாரத்தில் இந்தியாவின் இரு இருமல் மருந்துகளை அந்த நாடு பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய இருமல் மருந்து
உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் டாக்-1 மேக்ஸ், ஆம்ப்ரோனால் ஆகிய இரு மருந்துகளை மரியான் பயோடெக் எனும் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் இந்த இருமல் மருந்துகளை இறக்குமதி செய்து தங்கள் நாட்டில் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த நாட்டில் இந்த இருமல் மருந்துகளை குடித்த சில குழந்தைகளின் உடல்நிலை மோசமானதாக தகவல்கள வெளியானது. இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்திய இருமல் மருந்தை இவர்கள் அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இந்த சிரப்பை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
19 குழந்தைகள் பலி
இந்த நிலையில், இந்திய இருமல் மருந்தை அளவுக்கு அதிகமாக குடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த டாக் 1 மேக்ஸ் சிரப்கள், மாத்திரைகள் அந்த நாட்டின் அனைத்து மருந்து கடைகளிலிருந்தும் திரும்ப பெறப்பட்டது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குடித்ததால்தான் தங்கள் நாட்டு குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் நொய்டாவில் உள்ள மரியான் பயோடெக்கின் ஆம்ப்ரோனால் மற்றும் டாக் 1 மேக்ஸ் சிரப்பை பயன்படுத்த வேண்டாம் என உஸ்பெகிஸ்தானுக்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
அளவுக்கு அதிகமான எத்திலீன்
இந்த இந்திய சிரப்புகளில் டைஎத்திலின் கிளைகால் அல்லது எத்திலீனின் அளவுக்கு அதிக அளவு இருப்பதாக பரிசோதனை கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மரியான் நிறுவன தயாரிப்பின் இந்த குறிப்பிட்ட சிரப்புகள் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த இரு மருந்துகளும் மற்ற நாடுகளில் விற்பனை செய்ய அங்கீகாரம் பெறப்பட்டிருக்கலாம். ஆனால் அவை கள்ளச்சந்தையிலும் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அங்கீகாரம் ரத்து
இந்த நிலையில், உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான மரியான் பயோடெக் நிறுவனத்தின் அங்கீகாரத்தை உத்தரப்பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை ரத்து செய்துள்ளது. கடந்தாண்டு ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குடித்த 70 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.