இஸ்லாமாபாத்: ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளுக்கு புதிய விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முடிவால் பாகிஸ்தான் தவிர துருக்கி, ஈரான், ஈராக், சோமாலியா, ஏமன், சிரியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட உள்ளன. எமிரேட்ஸின் இந்த முடிவு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடர்பானதாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளுக்கு புதிய விசா வழங்குவதை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடமிருந்து அதிகாரபூர்வ உத்தரவை கேட்டுள்ளது என்று அவர் கூறினார். ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் தடை உத்தரவால் எத்தனை வகை விசாக்கள் பாதிக்கப்படும் என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் வணிகம், சுற்றுலா, போக்குவரத்து மற்றும் மாணவர் உள்ளிட்ட பல்வேறு விசா பிரிவுகள் உள்ளன.
தெற்காசிய நாட்டில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் விமான நிறுவனம் எமிரேட்ஸ் ஜூன் 3 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து பயணிகள் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. பின்னர் ஜூலை மாதம் மீண்டும் தன்னுடைய சேவையை தொடங்கியது. எமிரேட்ஸ் விமானத்தில் ஹாங்காங்கிற்கு சென்ற சுமார் 30 பாகிஸ்தானியர்களுக்கு சோதனையின் போது வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் ஆகஸ்ட் மாதம் குவைத் நாடும் வைரஸ் பரவல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி பாகிஸ்தான் உட்பட 30 நாடுகளுக்கு வணிக ரீதியிலான விமானங்களை தடை செய்தது. பாகிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் தொற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், பைசலாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூட பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைவரும் ஒரே தேசமாக செயல்பட வேண்டும் என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.