Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்கொரோனா தடுப்பூசி முதல் ரஷ்யா தலையீடு வரை.. அனல் பறந்த அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்

கொரோனா தடுப்பூசி முதல் ரஷ்யா தலையீடு வரை.. அனல் பறந்த அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்

வாஷிங்டன் : இன்னும் சில வாரங்களுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த அறிவிப்பு வெளியாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உடனான விவாதத்தின் போது அவர் இதை தெரிவித்தார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் இரண்டு அதிபர் வேட்பாளர்களும் மிக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் நடைபெற்றது. அமெரிக்க தேர்தலை பொறுத்தளவில் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே இப்படியான விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். ஏற்கனவே முதல்கட்ட விவாதம் செப்டம்பர் 29ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட விவாதம் அதிபர் டிரம்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் மூன்றாம் கட்ட விவாதம் இன்று நடைபெற்றது. பாதுகாப்பு கருதி இரண்டு வேட்பாளர்களும் தொடக்கத்தில் கை குலுக்குவதை தவிர்த்துக்கொண்டனர்.

அப்போது ஜோ பிடன் பேசுகையில் அதிபர் டிரம்பிடம் நாம் இருண்ட காலத்திற்குள் செல்வதை தடுக்க ஒரு திட்டங்களும் இல்லை. உலகில் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் தான் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தனை மக்களுடைய இறப்பிற்கு பொறுப்பாளரான ஒருவர் அமெரிக்காவின் அதிபராக இருக்க முடியாது. நாம் இருண்ட காலத்திற்குள் செல்ல இருக்கிறோம் டிரம்பிடம் இது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என ஜோ பிடன் கூறியிருந்தார்.

Trump gave important update about covid-19 vaccine

இதற்கு அதிபர் டிரம்ப் பதில் கொடுத்து பேசுகையில் நாம் எந்த ஒரு இருண்ட காலத்திற்குள்ளும் செல்லவில்லை, விரைவிலேயே அமெரிக்கா மீண்டும் திறக்கப்படும் என்றார். நாம் இப்போது தான் முக்கியமான திருப்பு முனையில் இருக்கிறோம் விரைவிலேயே நம்மை விட்டு கொரோனா வைரஸ் விலகி சென்றுவிடும் , “எங்களிடம் ஒரு தடுப்பூசி உள்ளது, அது தயாராக உள்ளது இன்னும் சில வாரங்களில் அது நடைமுறைக்கு வர உள்ளது என்றும் டிரம்ப் கூறினார்.

மேலும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் குறித்து பேசிய டிரம்ப், சீனாவை பாருங்கள், இந்தியா மற்றும் ரஷ்யாவை பாருங்கள் அங்கெல்லாம் காற்று மாசுபாடு எவ்வளவு உள்ளது என்று பாருங்கள். ஆனால் அமெரிக்காவுக்கு தான் அதிக கெடுபிடிகள் அதனால் தான் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து தாம் வெளியேறும் முடிவை எடுத்ததாகவும் கூறினார்.

பின்னர் ஜோ பிடன் பேசுகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வேறு எந்த நாட்டின் தலையீடும் இருந்தால் தாம் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவர்கள் அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். எந்தவொரு நாடும், அது யாராக இருந்தாலும், அமெரிக்க தேர்தல்களில் தலையிட்டால் ஒரு விலை கொடுக்க நேரிடும் என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன் என்று ஜோ பிடன் கூறினார். விவாதத்திற்கு ஒருநாள் முன்னதாக ரஷ்யாவும், ஈரானும் அதிபர் தேர்தலையொட்டி மக்கள் கருத்தில் மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கின்றனர் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.