சென்னை: தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. இதற்கு அர்த்தம் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர் என்பது மட்டுமல்ல பலரும் சமூக இடைவெளி என்பதையே மறந்துவிட்டனர். மேலும் பத்தில் 2 பேர் கூட மாஸ்க் அணிவதில்லை. அணிபவர்களுக்கு கூட பாதுகாப்பு கருதி இல்லாமல் கடமைக்கு மட்டுமே அணிந்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா உச்சம் அடைய தொடங்கிய நேரத்தில் தமிழகத்தில் தான் இரண்டாவதாக மிக அதிக பாதிப்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. முக்கியமாக கிராமங்களை விட நகரங்களிலேயே அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் நகரங்களில் இருக்கும் கூட்ட நெரிசல் எளிதில் பிறரிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவியது. குறிப்பாக தலைநகர் சென்னை தான் மிக மோசம்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்
சென்னையில் கொரோனா உச்சம் எடுக்க முக்கிய காரணமாக இருந்தது கோயம்பேடு மார்க்கெட். கொரோனா பரவலின் ஆரம்பக்கட்டத்திலேயே நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வரை வந்து செல்லக்கூடிய முக்கிய இடமான கோயம்பேடு மார்க்கெட் திறந்தே வைத்திருந்தனர், அங்கு வருபவர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறியது உள்ளிட்ட காரணங்களால் கோயம்பேடு கிளஸ்டராக மாறியது.
Also Read: வைட்டமின் டி மற்றும் கொரோனா வைரஸ்- இப்படி ஒரு தொடர்பு இருக்கா?
ஏப்ரல் 27ம் தேதி கோயம்பேட்டில் முதல் கேஸ் வந்தது. அதன்பின் தமிழகத்தில் வரிசையாக கொரோனா கேஸ்கள் வர தொடங்கியது. தமிழகம் முழுக்க கோயம்பேடு காரணமாக கொரோனா கேஸ்கள் பரவியது. சென்னையில் மட்டும் இதனால் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே படிப்படியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக தினசரி 4 ஆயிரம் என்கிற அளவில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு அக்டோபர் மாத இறுதியில் 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் அரசு லாக்டவுனில் தளர்வுகளை ஏற்படுத்தியது. மேலும் இ பாஸ் உள்ளிட்ட நடைமுறைகளும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் லாக்டவுன் காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களை நோக்கி மீண்டும் வர தொடங்கிவிட்டனர்.
ஆனால் இப்போது மக்களிடையே கொரோனா சாதாரண நிகழ்வாக பார்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் குறைவது மற்றும் மக்கள் கொரோனவுடன் வாழ பழகிவிட்டனர் என்பதே. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வது கிடையாது. குறிப்பாக வெளியே செல்லும் போது பெருமபாலானோர் மாஸ்க் அணிவதில்லை, சமூக இடைவெளி என்பதே பல இடங்களில் மறந்து விட்டனர். அதிகாரிகளும் இதுகுறித்து முன்புபோல் கண்டுகொள்வது கிடையாது. கொரோனா முழுவதுமாக சமூகத்தை விட்டு மறையும் முன்பாகவே இப்படி அலட்சியமாக நடந்துகொள்வது மீண்டும் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் லாக்டவுன்
அமெரிக்கா, ஐரோப்பாவின் சில நாடுகளில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகியுள்ளது. இதனால் பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் லாக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. இந்தியாவிலும் குளிர் காலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் மக்கள் மாஸ்க் அணிவதை தவிர்த்து வருவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் இருப்பதும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.