பெரும் பரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த மத்திய பட்ஜெட் இன்றுடன் ஓய்ந்தது. இனி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் முழுக்கவனமும் ஈரோடு இடைத்தேர்தலில் மட்டுமே உள்ளது. இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், மற்ற கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அ.தி.மு.க.வினர் இன்றுதான் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இடைத்தேர்தல்:
அதுவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சார்பில் தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் செந்தில்முருகனும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒரே கட்சிக்காக இரண்டு வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பதால் அ.தி.மு.க.வின் உண்மையான விசுவாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இத்தனை நாட்களாக பா.ஜ.க.வின் ஆதரவுடன், பா.ஜ.க.விற்கு இணக்கமாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த இடைத்தேர்தலில் அவர்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள், சென்னையில் உள்ள மாநில பா.ஜ.க. தலைவர்கள் வரை இணக்கமாக சென்று தனக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளார். ஒரு ஆட்சி முழுவதும் பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்துவிட்டு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வை கழற்றி விடுவதற்கு என்ன காரணம்?
தலையீடுகள்
தமிழ்நாட்டில் தி.மு.க.- அ.தி.மு.க. என்ற இருபெரும் கட்சிகள் பலம் பொருந்தியவையாக இருந்து வரும் நிலையில், ஜெ.வின் மரணத்திற்கு பிறகு பா.ஜ.க. அ.தி.மு.க. வுடன் பயணித்து பின்பு அ.தி.மு.க. மீது ஏறியே சவாரி செய்ய ஆரம்பித்தது. இது அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தாலும், அவர்கள் பா.ஜ.க.வுடனான கூட்டணியை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு எதிரான மனநிலை அதிகளவில் காணப்படுவதால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பா.ஜ.க.வை கழற்றிவிட்டால் நமது செல்வாக்கு அதிகரிக்கும் என்றும், சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் கருதுகின்றனர். ஏனென்றால், பா.ஜ.க.வின் தலையீடுகள் அதிகளவில் இருப்பதாகவும், இதனால் பல்வேறு முக்கிய முடிவுகளை கூட அவர்களுடன் கலந்தாலோசித்தே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
மனக்கசப்பு
மேலும், கூட்டணி கட்சித்தலைவர்கள் சிலர்கூட பா.ஜ.க. ஆதரவளித்தால் மட்டுமே ஆதரவு என்று கூறியதால் பழனிசாமி தரப்பினர் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். மேலும், எதிர்க்கட்சி அ.தி.மு.க.வாக தமிழ்நாட்டில் இருக்கும்போது, பா.ஜ.க.வும், அண்ணாமலையும் எதிர்க்கட்சி போல செயல்படுவதும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வலுவான எதிர்க்கட்சியாக வலம் வரவும் அ.தி.மு.க.வின் வலுவான தலைமையாக மாறவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பா.ஜ.க.வுடனான உறவை முறித்துக் கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த வியூகம் இடைத்தேர்தலில் வெற்றியை கொடுக்குமா? அல்லது அவரது அரசியல் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.