பள்ளி மாணவர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் வந்தாலே தேர்வு ஜூரம் தொற்றிக்கொள்வது வழக்கம். எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒரு தரப்பு மாணவர்களும், ஒரு தரப்பு மாணவர்கள் எப்படியாவது முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்றும் படிப்பார்கள்.
நாம் தேர்வுக்கு தயார் ஆகும்போது எப்படி படிக்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் நாம் எந்த நேரத்தில் படிக்கிறோம் என்பதும் முக்கியம் ஆகும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் படித்தால் எளிதாக இருக்கும்.
அதிகாலை:
ஆனால், பெரும்பாலும் படிப்பதற்கு உகந்த நேரமாக அதிகாலை நேரமே உள்ளது. அதிகாலையில் தூங்கி எழுந்ததும், மனமும், உடலும் நல்ல புத்துணர்ச்சியுடன் இயங்கும். அப்போது மூளையும் புத்துணர்வான ஆற்றலுடன் இயங்க ஆரம்பிக்கும்.
முந்தைய நாள் பிரச்சனைகள், கவலைகள் மறந்து போயிருக்கும். புதிய எண்ண ஓட்டங்கள் தொடங்கும். அந்த வேளையில் படிக்கும் பாடங்கள் குழந்தைகளுக்கு எளிதாக புரியும். அதுமட்டுமின்றி நினைவில் நிற்கும்.
இரவு:
பெரும்பாலும் இரவு நேரங்களில் அதீத அமைதி நிலவும். ஏதேனும் வாகனம் வரும் சத்தம் கேட்கலாம். மற்றபடி, நள்ளிரவை நெருங்க நெருங்க, அமைதி கூடிக்கொண்டே செல்லும். அந்த அமைதி நேரத்தில் படிப்பது மிகவும் உதவியாக இருக்கும். பல மாணவர்களுக்கு தூக்கம் கண்களை சொருகும் என்பதால் அவர்கள் தூக்க கலக்கத்திற்கு சென்றுவிடுவார்கள்.
சிலருக்கு, காலை உணவை அருந்திய பின்னர், படிக்க தொடங்கி மதிய உணவிற்குள்ளான நேரத்திற்குள் படிக்க பிடிக்கும். ஏனெனில் மதியத்திற்கு மேல் தூக்கம் வரும் என்பதால் மேற்கண்ட நேரத்தை தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் படிப்பதற்கு ஒவ்வொரு நேரம் சிறப்பானதாக இருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு எந்த நேரம் சௌகரியமோ அந்த நேரத்தை ஒதுக்கித் தர வேண்டியது பெற்றோரின் கடமை. அந்த நேரங்களில் அவர்களுக்கு முடிந்தவரை அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்.
நேரம் முக்கியமா?
படிக்கும் நேரத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்றால், அது உங்கள் ஆரோக்கியம் சார்ந்தது ஆகும். சில மாணவர்கள் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படித்து வீண் உடல்நலக்கோளாறை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்படும். அதன் காரணமாக, எந்த நேரம் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஒத்துழைக்குமோ அந்த நேரத்தில் படித்தால் போதுமானது ஆகும்.
ALSO READ | பெற்றோர்களே.. தேர்வு எழுதும் பசங்களுக்கு என்ன பண்ணனும் தெரியுமா..?