Thursday, June 1, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுஇடைத்தேர்தலில் புதிய ட்விஸ்ட்.. இ,பி.எஸ்.சை நேரில் சென்று சந்தித்த அண்ணாமலை..! கதிகலங்கிய ஓ.பி.எஸ்.!

இடைத்தேர்தலில் புதிய ட்விஸ்ட்.. இ,பி.எஸ்.சை நேரில் சென்று சந்தித்த அண்ணாமலை..! கதிகலங்கிய ஓ.பி.எஸ்.!

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரம் ஈரோடு இடைத்தேர்தல். இந்த தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தங்களது வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அறிவித்துள்ளது. நாம் தமிழர், அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் மோதல், எடப்பாடி – பா.ஜ.க. மோதல் ஆகிய காரணங்களால் வேட்பாளர் அறிவிப்புக்கே மிகப்பெரிய இழுபறியை எடுத்துக்கொண்டது.

இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க. நின்றாலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு, இடைத்தேர்தல் பணிமனை பேனரில் பிரதமர் மோடி, அமித்ஷா, அண்ணாமலை புகைப்படம் இல்லாதது போன்றவை அனைத்தும் பா.ஜ.க.வை எடப்பாடி பழனிசாமி தரப்பு கழற்றவிட்டதாவே நினைக்க வைத்தது.

மறுமுனையில், ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.விற்கு ஆதரவாகவே செயல்பட்டதும், எடப்பாடி வேட்பாளரை அறிவித்தவுடன் வேட்பாளரை அறிவித்ததும், அவரது குஜராத் பயணமும் அவருக்கு பா.ஜ.க.விற்கு ஆதரவு கிட்டிவிடும் என்றே அரசியல் நிபுணர்களை கருத வைத்தது. ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க அண்ணாமலை டெல்லி சென்றிருந்த அதே சமயத்தில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் தம்பிதுரை சந்தித்தார்.

நேற்றிரவு நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிற்கே சென்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும், சி.டி.ரவியும் சந்தித்துள்ளனர். மேலும், ஒரு மணிநேரத்தில் தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால், பா.ஜ.க.வின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு என்பது தெளிவாகியுள்ளது.

நேற்று இரவு சந்திப்பிற்கு பிறகு நடைபெற்ற இந்த திடீர் அரசியல் மாற்றத்தால் ஓ,பன்னீர்செல்வம் தரப்பினர் கதிகலங்கி உள்ளனர் என்றே கூற வேண்டும். குறிப்பாக, இன்று உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. தொடர்பான முக்கிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை நேரில் சென்று சந்தித்திருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியை சந்தித்த தம்பிதுரை எடப்பாடி பழனிசாமி தரப்பில் சில வாக்குறுதிகளை அளித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.