இன்றைய காலத்தில் நல்ல தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், கல்விக்கான போதிய வாய்ப்புகள் கிடைத்தும் பலரும் வேலைகளை பெறுவதில் தடுமாறி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் வேலை தேடி நேர்காணலுக்கு செல்ல, செல்லவே தங்களை மெருகேற்றிக் கொள்கின்றனர்.
இறுதியாண்டு படிப்பில் இருக்கும் மாணவர்கள் தாங்கள் சார்ந்த துறைகளில் பணிகளில் செல்வதற்கு தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்போது ஒவ்வொரு இளைஞர்களும் தங்களுக்கென ஒரு துறை வைத்து கொள்கின்றனர். படிப்பது ஒன்றும், வேலை செய்வது ஒன்றும் வைத்துக்கொள்கின்றனர். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் போட்டியும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
கல்லூரி வாழ்க்கையில் இருந்து விடைபெற்று, வேலை தேடும் மாணவர்கள் தங்களது தனி திறமைகளை வளர்த்து கொள்வது நல்லது. அப்படி என்னென்ன திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.
ஏற்றுக்கொள்ளும் தன்மை:
எது நடந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், வேலையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்கும் தன்மையை உடையவர்களையே நிர்வாகங்கள் ஏற்கின்றன. அதுவே நம்மை தலைமை பண்பிற்கும் உரியவராக மாற்றும்.
மற்றவரிடம் பேசுதல்:
மற்றவரிடம் பேசும் போது, தங்களது நோக்கங்களை நேரடியாக வெளிப்படுத்துவது சிறந்தது ஆகும்.
அனைவரிடமும் சகஜமாக பழகுதல்:
நாம் ஒரு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும்போது குழுவாக செய்யும் செயலில் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். அது செய்யும் வேலையை எளிதாக்கும்.
பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன்:
முடிவு எடுத்தல் மற்றும் பிரச்சனைக்கான தீர்வினை காணும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். தீர்வுகளை உருவாக்குவதும், பிரச்சனைகளை தீர்ப்பதும் ஒரு பணியாளரிடம் இருந்து உங்களை வேறுபடுத்தும். வேகமாக மாறிவரும் உலகில் முதலாளிகளுக்கு பிரச்சனைகளை தீர்க்கவும், யோசனைகளை வழங்கவும் மற்றும் நிறுவனத்தை மேம்படுத்தவும் உதவும் ஊழியர்களே தேவை.
சிறந்த மேலாளர்களுக்கான திறன் :
சிறந்த மேலாளர்களுக்கான திறன், மற்றவர்களிடம் பொறுமையுடன் இருப்பதும் மற்றும் செய்கின்ற வேலையை விரைவாகவும், சிறப்பாகவும் செய்து முடிப்பதும் தான்.
தொழில்நுட்ப அறிவு :
இந்த கால மாணவர்களுக்கு தொழில்நுட்பங்களின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. எனினும், தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புதுமை, பொறுமை:
இந்த திறன் நல்ல கேள்விகளை கேட்கும் திறனையும், சிக்கல்களைத் தீர்க்கும் திறனையும் உருவாக்கும். மற்றவரிடம் பேசும்போது அல்லது ஒரு வேலையை செய்யும் போது பொறுமையுடன் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
முன்னேற்ற பாதையை பற்றி சிந்திப்பது:
இந்த திறமை எப்போதும் அவசியமான ஒன்றாகும். நம்முடன் இருப்பவர்களை குறைத்து மதிப்பிடாமல், முன்னேற்ற பாதையில் சிந்திக்க வேண்டும். இது அவர்களுடன் நல்ல பழக்கத்தை ஏற்படுத்துவதுடன் உங்களையும் முன்னேற்றும். இந்த திறன்களை மாணவர்கள் வளர்த்து கொண்டு வேலை தேடினால் வெற்றி நிச்சயம் தான்.