Sunday, May 28, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுகடலுக்கு நடுவில் பேனா சிலை..! அவசியமா? அனாவசியமா?

கடலுக்கு நடுவில் பேனா சிலை..! அவசியமா? அனாவசியமா?

தமிழ்நாட்டிற்கு 5 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் கருணாநிதி. இவர் தமிழ்நாட்டிற்காகவும், தமிழுக்காகவும் ஆற்றிய பணிகள் என்பது மகத்தானவை. இவர் தமிழ் மொழிக்காக ஆற்றிய சேவையை பாராட்டி சென்னை, மெரினாவில் கடலுக்கு உள்ளே பேனா சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு மத்திய அரசு ஒப்புதலும் வழங்கியுள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூபாய் 81 கோடி ஆகும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

கருணாநிதிக்கு பேனா வைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்து விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது. கருணாநிதி ஆற்றிய சேவைக்காக என்று இதை பாராட்டினாலும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அணுகினால் நிச்சயம் இது சரியான போக்கு அல்ல என்பதை நாம் உணரலாம்.

நம்முடைய உலகம் மூன்று பகுதி நீராலும், ஒரு பகுதி மட்டும் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ந்த தொழில்நுட்பமான 100 ஆண்டுகாலத்தை கடக்கும் முன்பே இந்த பூமியில் சுற்றுச்சூழல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதன் தாக்கத்தை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம். பல உலக நாடுகள் சுற்றுச்சூழலை காப்பதற்காக பல கோடிகளை தாரை வார்த்து வருகின்றன.

ALSO READ: இடைத்தேர்தலில் புதிய ட்விஸ்ட்.. இ,பி.எஸ்.சை நேரில் சென்று சந்தித்த அண்ணாமலை..! கதிகலங்கிய ஓ.பி.எஸ்.!

பா.ஜ.க. செய்ததையே தி.மு.க. செய்யலாமா?

இந்த நிலையில், கடலின் உள்ளே சிலை அமைப்பது என்றால் அந்த இடத்தை மக்கள் நடமாடும் அளவிற்கு சமதளமாக மாற்றி அதில் கடல் சீற்றம், புயல், காற்று, மழை என அனைத்தையும் தாங்கும் ஒரு பேனா சிலையை அமைக்க வேண்டுமென்றால் நாம் கடலின் பகுதியை ஆக்கிரமிக்கிறோம் என்றுதான் அர்த்தம். இனி வரும்காலங்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்தவொரு செயலும் மிகவும் மனிதன் தன்னுடைய இனத்திற்கு தானே நாட்களை குறிக்கும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்களும், பவளப்பாறைகளும் பாதிக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படும். கருணாநிதிக்கு பேனா வைப்பதை யாருமே எதிர்க்கவில்லை,. அதை கடலில் வைப்பதற்கும், அதற்காக ரூபாய் 81 கோடி செலவு செய்வதையும்தான் எதிர்க்கிறார்கள். மக்கள் வரிப்பணம் ரூபாய் 81 கோடிக்கு தி.மு.க. அரசு சிலை வைத்தால், அவர்களுக்கும் ரூபாய் 3000 கோடி செலவில் படேலுக்கு சிலை வைத்த பா.ஜ.க.வினருக்கும் என்ன வித்தியாசம்? என்பதே ஒரு சராசரி வாக்காளனின் மனதில் ஓடும் எண்ணம் ஆகும்.

யாருக்கு என்ன லாபம்?

இந்த பேனா சிலைக்காக செலவிடும் ரூபாய் 81 கோடியில் தமிழ்நாட்டில் புதியதாக ஒரு பல்கலைக்கழகத்தையோ, அல்லது கல்லூரியையோ அல்லது பல பள்ளிகளையோ உருவாக்கலாம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் படிப்பார்கள். அந்த கல்வி நிறுவனத்திற்கு கருணாநிதியின் பெயரையே சூட்டலாம். அதை விடுத்து, இந்த பேனா சிலையை வைப்பதால் மக்களுக்கு என்ன லாபம்? சுற்றுலா மூலம் இந்த பேனா சிலை மூலம் வருவாய் எடுக்கலாம் என்று பதிலளிப்பவர்களுக்கு சுற்றுச்சூழல் கதி என்ன? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம் ஆகிறது.

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு, பெண்களுக்கான நலத்திட்டங்கள், இலவச பஸ்பாஸ், என்று சாமானியனின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை உருவாக்கிய கருணாநிதியின் புகழுக்கு இந்த பேனா சிலை ஒன்றும் பெரிதாக புகழ் சேர்த்துவிடாது. அதற்கு பதிலாக அவர் கொண்டு வந்தது போலவே அவரது பெயரில் மக்கள் எப்போதும் பயன்பெறும் திட்டத்தை கொண்டு வரலாம் என்பதே ஒரு சாதாரண குடிமகனின் விருப்பம் ஆகும்.