ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான கடைசி நாள் தேர்தல் பரப்புரை நேற்று நிறைவடைந்தது. கடைசி நாள் பரப்புரையில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.
இடைத்தேர்தல்:
பொதுவாக இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சி தனது கௌரவத்தை நிலைநாட்டுவதற்கான தேர்தல் ஆகும். தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஆளுங்கட்சியான தி.மு.க. அவர்கள் களமிறங்காமல் காங்கிரஸ் களமிறங்கியதும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதும் தி.மு.க.வினருக்கு சற்று கிலியை ஏற்படுத்தியது என்பதே உண்மை.
ஏனென்றால், தற்போது அ.தி.மு.க.வை தன் வசம் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக கொங்கு மண்டலம் பார்க்கப்படுகிறது. அவர் எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கும் அந்த கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்களின் ஒத்துழைப்பே காரணம் ஆகும்.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு தொகுதி காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தன்வசம் வைத்திருந்த தொகுதி என்றாலும், நேரடியாக அ.தி.மு.க.வுடன் தி.மு.க. மோதவில்லை.
மாதந்தோறும் ரூபாய் 1000
இதனால், நேற்று பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் யாரும் எதிர்பாராத அஸ்திரத்தை கையில் எடுத்தார். அதாவது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண்களின் எதிர்பார்ப்பான மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் எப்போது என்ற கேள்விக்கு ஒரு பதிலளித்தார். அதாவது, மாதந்தோறும் மகளிருக்கு ரூபாய் 1000 திட்டம் பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்புதான் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் ஹாட் டாபிக்காக அது மாறிவிட்டது.
இதனால், இடைத்தேர்தலைச் சந்திக்கும் மக்களின் ஆழ்மனதிற்குள் காங்கிரசை கொண்டு சேர்க்கும் அஸ்திரமாக மாதந்தோறும் ரூபாய் 1000 திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். அவரின் அஸ்திரம் வேலை செய்தததா? அல்லது இலக்கை தவறியதா? என்பதை வரும் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கையன்று பார்க்கலாம். முதல்வரின் இந்த பரப்புரை தேர்தல் நடத்தையை மீறிய செயல் என்று அ.தி.மு.க.வினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.