Thursday, June 1, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடு“கடல்ல பேனா சிலை வைச்சா உடைப்பேன்..” சீமான் பேச்சால் பரபரப்பு..! தி.மு.க. கொந்தளிப்பு..!

“கடல்ல பேனா சிலை வைச்சா உடைப்பேன்..” சீமான் பேச்சால் பரபரப்பு..! தி.மு.க. கொந்தளிப்பு..!

இந்தியாவின் பட்ஜெட் நாளை தாக்கல் ஆவது ஒருபுறம், ஈரோடு இடைத்தேர்தல் ஒருபுறம் என்று தமிழ்நாடு அரசியல் களம் பரப்பாகி வரும் நிலையில் மறுமுனையில் சமூக வலைதளங்களில் கடலில் பேனா வேண்டாம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ்நாட்டிற்கு 5 முறை முதலமைச்சராக இருந்து பல திட்டங்களை செயல்படுத்திவர் மறைந்த கருணாநிதி. தற்போது தி.மு.க. அரசின் சார்பில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக சென்னை மெரினா கடலில் அவருக்கு பேனா வைக்க தமிழ்நாடு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு தொடக்கம் முதல் பல்வேறு எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு சென்னை மெரினா கடற்கரையில் இருந்து சில அடி தூரம் கடலுக்குள் 650 மீட்டர் தொலைவில்,137 அடி உயரத்தில் ரூபாய் 81 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலுக்குள் இதுபோன்று சிலை அமைக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள், கடல் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல விவகாரங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று பலரும் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், கடலில் கருணாநிதிக்கு பேனா சிலை அமைக்க இன்று கலைவாணர் அரங்கில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் கருணாநிதிக்கு சிலை வைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால், கடலுக்குள் வைக்கக்கூடாது. வைத்தால் நான் உடைப்பேன் என்று ஆவேசமாக பேசினார். சீமானின் இந்த பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த கூட்டத்தில் பேசிய மீனவ சங்கத்தினர் பலரும் இதனால் கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் உள்ளதாகவும், 13 கிராம மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினர். சமூக ஆர்வலர்கள் பலரும் 81 கோடி ரூபாய் செலவில் சிலை அமைப்பதற்கு பதிலாக, ரூபாய் 81 கோடியில் மக்களுக்காக ஏதாவது நலத்திட்டங்கள் செய்யலாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.