Monday, May 29, 2023
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க.வுடன் கைகோர்க்கிறாரா கமல்ஹாசன்? ஆண்டவர் கணக்கு என்ன?

தி.மு.க.வுடன் கைகோர்க்கிறாரா கமல்ஹாசன்? ஆண்டவர் கணக்கு என்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 10 நாட்கள் கூட இல்லாததால் அந்த தொகுதியில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகிய கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு தேர்தல்:

ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி சார்பில் மறைந்த உறுப்பினர் ஈவெரா திருமகனாரின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நிலையில், இன்று காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கிய கமல்ஹாசனின் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை, அதன்பின்பு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்திய கமல்ஹாசனுக்கு விக்ரம் படம் மாபெரும் வெற்றியையும், ஒரு கம்பேக்கையும் அளித்தது. அந்த படப்பிடிப்பு தொடங்கி நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் வெளியானாலும், அந்த படத்தின் வெற்றி கமலை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது என்றே கூறலாம். அந்த படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிட்டது.

தி.மு.க.வுடன் கூட்டணியா?

அது முதல் கமல்ஹாசன் – உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாகவே உள்ளார். குறிப்பாக, தேர்தலுக்கு முன்பு திராவிட கட்சிகளை விமர்சித்த கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு தி.மு.க.வை விமர்சிக்கவே இல்லை. அவர் தி.மு.க.வுடன் கைகோர்க்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் செயல்பாடுகள் இருந்தது.

தற்போது, ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்காக கமல்ஹாசன் இன்று பரப்புரையில் இறங்கியுள்ளார். அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே கமல்ஹாசன் தற்போது களமிறங்கியிருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க.வின் கூட்டணி பட்டியல் ஏற்கனவே மிகவும் பெரியது. இதில், கமல்ஹாசனின் கட்சி இணைந்தால் அவர்களுக்கு பலமாகவே அமையும்.

ஆண்டவர் கணக்கு என்ன?

ஆனால், அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட்டோ அல்லது 2 சீட்டோ மட்டும்தான் ஒதுக்க முடியும் என்பது நிதர்சனம். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலில் கமல் தி.மு.க.வுடன் கைகோர்க்கிறாரா? அல்லது தனித்து நிற்கிறாரா? அல்லது அடுத்த சட்டமன்ற தேர்தலில் பெரியளவில் சீட்டுகளை அள்ளலாம் என்று காத்திருக்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ALSO READ | ஈரோடு இடைத்தேர்தல் அட்ராசிட்டி…! ஜிலேபி சுட்டு வாக்கு சேகரித்த தி.மு.க. அமைச்சர்..!