இந்தியாவில் ஜி20 மாநாட்டிற்காக இன்று சென்னையில் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ஜி20 உறுப்பு நாடுகளின் சார்பில் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஜி20 மாநாடு பற்றி விரிவாக காணலாம்.
ஜி20 நாடுகள் யார்?
அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகள் சேர்த்து மொத்தம் 20 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பே ஜி20 நாடுகள் ஆகும்.
பொருளாதார தாக்கம்
ஒவ்வொரு ஆண்டும் இந்த 20 நாடுகளும் இந்த கூட்டமைப்பில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டில் சந்தித்துக் கொள்வார்கள். இந்த 20 நாடுகளின் பொருளாதாரம் ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நாடுகள் என்பதால் இதன் சங்கமம் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. உலகின் மொத்த ஜிடிபியில், 85 சதவிகித ஜிடிபி இந்த 20 நாடுகளுக்குச் சொந்தமானது. உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகித மக்கள் இந்த 20 நாட்டைச் சேர்ந்தவர்கள்.
முதல் ஜி20 மாநாடு
கிழக்காசிய நாடுகளில் அப்போது ஒரு பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு, அது உலக பொருளாதாரத்தையும் தாக்கி உலகம் முழுக்க பரவி ஒரு சிறிய பொருளாதார சுணக்கத்தை உண்டாக்கியது. அதனால் முதல் G20 மாநாடு ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1999-ம் ஆண்டு நடைபெற்றது. உலகின் வளர்ந்த பணக்கார நாடுகள், உலகின் வளரும் டாப் பொருளாதாரம் கொண்டு நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளையும் சேர்த்து உருவாக்கியது தான் இந்த ஜி20 கூட்டமைப்பு ஆகும்.
ஆரம்ப காலகட்டங்களில் ஜி20 மாநாடுகளில் இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளாக அங்கம் வகித்த நிதி அமைச்சர்கள் மற்றும் நாட்டின் மத்திய வங்கித் தலைவர்கள் தான் சந்தித்துக் கொண்டனர். 2008ம் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்குப் பின் இந்த மாநாடுகளில் அனைத்து உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்களும் பங்கேற்கத் தொடங்கினர். இதனால், இந்த மாநாட்டை உலகம் முழுவதும் உன்னிப்பாக கவனிக்கும்.
உலக வர்த்தகம்
இந்த மாநாட்டில் சந்தித்துக்கொள்ளும் தலைவர்களின் சந்திப்பும், பேச்சுவார்த்தையும் உலக வர்த்தக பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும், இந்த சந்திப்பின்போது கருத்து வேறுபாடு கொண்ட இரு நாட்டின் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
இந்தாண்டு ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இன்று சென்னை, தரமணியில் ஜி20 கல்வி கருத்தரங்கு நடைபெற்றது. ஜி20 மாநாட்டிற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.